Primary tabs
தாயுமானவடிகள் திருப்பாடல்கள்
v
அம்மட்டுமன்று; அப் பாட்டுகள் வரிப்பாட்டுகளாகவும் அமைந்துள்ளன.
நல்லியல் சேர் நம் தமிழகத்தில் திருக்கோவில்களில் நிகழும் அம்மையப்பர் திருமணம் தொன்மைத் தனித்தமிழ் முறைமையாம் களவு கற்பின் வழித்தாம். இதன் சுருக்கம் கழகத்து 1008 ஆம் வெளியீடாகிய பன்னிரு திருமுறைப் பெருந் திரட்டென்னும் நூலின் பக்கம் 333 இல் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.
திருக்கோவிலின்கண் அம்மை அப்பர் திருமணம் நிகழுங்கால் முதற்கண் அம்மை தவமியற்றுந் திருக் காட்சி நிகழும். அக் காட்சி மனைவளந் திகழும் குறிஞ்சித்திணை என்று சொல்லும்படி சிறப்புற ஒப்பனை செய்யப்பட்டுள்ள திருமண்டபத்தின்கண் காணப்பெறும். அம்மட்டுமன்று; தீந்தமிழ் மாதரார் மக்களுடனும் ஒக்கலுடனும் தேனும் தினைமாவும் சேர்த்துப் பிசைந்த மாவினைக் கோபுரம்போல் நிறுவி அதன் முகட்டில் நெய்விளக்கேற்றி வழிபடுவர். இதுவும் குறிஞ்சித் திணையினையே குறிக்கும் குறிப்பாகும். அம்மை தவத்துக்கு எழுந்தருளுங்கால் மெய்யடியார்கள் இவ் வருமையான "ஆனந்தக்களிப்பினை" ப் பண்ணுடனும், பணிவுடனும், பத்தியுடனும் பின்னோதிக்கொண்டு அணி செய்துவருவர். இம் முறையால் தாயுமான அடிகள் பாடல் சித்தாந்த சைவர்களால் எம் முறையில் கையாளப்பட்டு வருகின்றதென்பது நன்குணரலாம்.
இவ்வானந்தக்களிப்பினுள் ஒரு பாட்டு வருமாறு :
ஆனந்த மோனன் அருட்குரு நாதன்
தன்பாதஞ் சென்னியில் வைத்தான்
என்னைத் தானறிந் தேன்மனந் தானிறந்தேனே."
- ஆனந்த - 10.
சிவபெருமானின் திருவடிக் கலப்பினால் ஆருயிர்கள் தலைவனையும் தம்மையும் உணர்ந்து பேரின்பத் தழுந்தும் உண்மை மேலதன்கண் வலியுறுத்தப்பட்டது. இவ்வுண்மையினை வரும் தனித்தமிழ்த் திருமாமறையாம் திருவாசகத் திருப்பாட்டுகளான் உணர்க:
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ."
- 8. திருத்தெள் - 4.