நிற்கும் பேரின்ப வண்ணத்தன். இது பத்துப் பாட்டுகளையுடையது. ஐந்தாவது பாட்டில் செயலனைத்தும் முதல்வன் செயலென்னும் துணிபும், அவன்பால் "சிரத்தை என்னும் வாளும்," "''''மெய்ஞ்ஞானமென்னும் தீரமும்" எய்துமாறு வேண்டுதல் புரியுமாறு பெறப்படும்.
3. பொருள் வணக்கம் : என்றும் ஒரு படித்தாய் நின்று நிலவுவது அப் பேரின்பப் பொருள் என்னும் உண்மை ஈண்டு வலியுறுத்தப்படுகின்றது. அம் முதல்வன் ஒன்றாய், வேறாய், உடனாய்க் கலந்து நீக்கமற நின்று இயக்கியருளும் தன்மைக்கு அகர உயிரெழுத்தினையே திருவருள் கைவந்த செந்தமிழ்ச் செல்வர் எடுத்து மொழிவர். அதனையே அடிகளும் பத்தாவது பாட்டில் மொழிந்தனர். இதன் விளக்கத்தை 55 - 56 பக்கங்களில் காண்க.
4. சின்மயானந்த குரு : அம் முதற்பொருள் அறிவும் அளவிலா இன்பமும் இயல்பாகவே அமைந்த எழிற்பெரும் பொருள். அதுவே செவ்வி வருவித்து ஆருயிர்களைத் திருவடிக்கண் சேர்த்தருள்வது. அங்ஙனம் சேர்த்தருளச் சிவ குருவாய் எழுந்தருள்வது. அதனால் இது பொருள் வணக்கத்தின்பின் வைக்கப்பட்டது. அல்லற்படுகின்ற ஆருயிரை அவ்வல்லலினின்றும் விடுவித்து நல்ல திருவடிக்கண் சொல்லரிய இன்பந்துய்ப்பிக்கும இயல்புகள் பக்கம் 71-72 இல் காண்க.
5. மௌனகுரு வணக்கம் : முடிந்த முடிபாக வரும் சிவகுரு மோன நிலையினராயிருப்பர். ஆருயிர்கள் மதுவுண்ட வண்டெனப் பேரின்பந் துய்க்குங்கால் பேச்சு நிகழ்வதற்கு இடமில்லை. ஆதலால் அவ்வுண்மையினை உணர்த்த எழுந்தருளிய சிவகுருவும் பேச்சற்ற நிலையிலிருந்து உணர்த்தியருள்வதே வாய்வதாம். இதனால் தலைப்பு இயைபு காண்க. மௌனகுரு மாண்பு பெற்றோர் நற்றவத்தவ ராவர். அவர்கள் திருமுன் எவ்வுயிரும் பகைநீங்கி நகை(நட்பு)யுடன் பணிசெய்யும் பான்மை பக்கம் 101-102 இல் காண்க.
6. கருணாகரக் கடவுள் : அங்ஙனம் சிவகுருவாக எழுந்தருளும் இறைவன் இயல்பாகவே பேரருட்பெருங்கடற் கடவுள். அவ்வியல்பினால் அவன் திருவடிக்கு என்றும் நீங்கா அடிமைகளாகிய ஆருயிர்களின் துன்ப நீக்கத்திற்கும் இன்ப ஆக்கத்திற்கும் வேண்டுவன உதவித் துணைநிற்கவேண்டுவது அன்பன்றன் இன்றியமையாக் கடனாயிற்று. அதன் பொருட்டு ஆருயிர்கள் "பணிசெய்து கிடப்பது" அவ்வுயிர்கட்கு இன்றியமையாக் கடமையும், உரிமையும் ஆயிற்று. இவவுண்மை