இன்பம் இல்லாதன, இன்பம் எய்தாமையாலாகிய துன்பம் உடையன. சிற்றறிவென்பது முதல்வன் முற்றறிவு உடங்கியந்து விளக்கினாலன்றி விளங்கா இயல்பிற்று. அம்மட்டுமன்று; ஒன்றையறியுங்கால் மற்றொன்றனை அறியும் பெற்றியும் இல்லாதது. மாயை என்றும் அழியா உண்மையுள்ளது. ஆனால் அறிவில்லாதது மலகன்மங்களும் மாயை போன்றனவே. "எங்கும் நிறைகின்ற பொருள்" "சச்சிதானந்தசிவம்" என்னும் தன்மையால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. "சச்சிதானந்த சிவத்தை" அடைதற்கு வழி பக்கம் 207 இல் காண்க.
12. "தேசோமயானந்தம்" "சச்சிதானந்தசிவம்" பேரொளிப் பிழம்பாகிய பேரின்பப் பெரும் பொருள் என்னும் பெற்றியினை விளக்குவதால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. தேவர் மூவராலும் வெல்ல முடியாத மறலியை வெல்லுவதே "தேசோமயானந்த" வழிபாட்டின் சிறப்பு. பக்கம் 237 இல் காண்க.
13. "சிற்சுகோதய விலாசம்" "தேசோமயானந்தம்" எய்திய பின் எய்தக்கடவது அறிவின்ப ஊற்றுத் தோன்றும் அருள் உறையுளேயாம். அதனால் இஃது அதன் பின் அமைந்தது. அறிவின்ப ஊற்றுத் தோன்றவரும் வாயில் ஆருயிர்கட்கு உருகி இதமுரைப்பதேயாம். இதனைப் பக்கம் 254 - 255 இல் காண்க.
14. "ஆகார புவனம்-சிதம்பர ரகசியம்" சித்தாந்தச் செல்வர்கட்குச் "சிதம்பர ரகசிய" மாகிய "தில்லைத் திருச்சிற்றம்பலமே" உயிர் நிலையாகும். அறிவின்ப ஊற்றுத்தேன் உறையுள் திருச்சிற்றம்பலமே யாதலால் இஃது ஆகார புவனம் என்னும் தலைப்பின் பின் அமையப்பெற்றது. இதன்கண் முப்பொருளின் தன்மையும், முதல்வன் முதன்மையும், ஆருயிரின் தன்மையும், அடிமையும், மாயையின் இயல்பும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பக்கம் 283 - 284 இல் காண்க. இது முதல் வருவன பாட்டின் முதற்குறிப்பால் அமைந்தன.
15. "தேன் முகம்" "சிதம்பர ரகசியம்" என்னும் தலைப்பால் உண்மை உணர்ந்தவர் சிவபெருமானின் முழு முதன்மையினையும் ஏனைத் தேவர்களாகிய சிற்றுயிர்களின் புன்மையினையும், யான் எனதென்னும் செருக்கற்றார் இயல்பினையும்; புறச்சமயத்தார் பொய்மையினையும், தனித்தமிழ்த் திருமாமறையினையும் உணர்ந்துய்ய வேண்டுமாதலால் இஃது அதன் பின் அமையப் பெற்றது. இதன்கண் காணப்படும் பத்துப்பாட்டும்