எல்லாரானும் இன்றியமையாது பாடம் பண்ண வேண்டுவன, முக்கட் செல்வரின் முதன்மையுணர்த்தும் குறிப்பினைப் பக்கம், 299 இல் காண்க. இதற்குக் கருவாய் அமைந்தன சிவஞானபோதத்து "இலயித்த தன்னில்" எனத் தொடங்கும் வெண்பாவும், "இறுதியாங் காலந்தன்னில்" எனத் தொடங்கும் சிவஞான சித்தியார் திருவிருத்துமு மாகும்.
16. "பன்மாலை" சிவபெருமான் தனித் தமிழ்ப் பாமாலைக்கே மிக்கவிருப்பினன். அஃது "அருச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்" என்னும் சிவபெருமான் திருமொழியான் உணரலாம். தூமறை கொலையகற்றிய நிலையான அருள்நிறை சிவ வேள்வியினைக் கூறும் தனித் தமிழ்மறை. சிவவுண்மை தௌ¤ந்தார் அதனைப் பாடுவதே சிற்ப்பாதலின் இது தேன்முகத்தின் பின் வைக்கப்பட்டது. ஆண்டானை உள்ளன்போடு பாடுவோர் அவன் திருவடிக்கு மெய்யடிமையாவர். அவர்கள் மறவா நினைவுடன் இருப்பர். இதனைப் பக்கம் 315 இல் காண்க.
17. "நினைவொன்று" மெய்யடிமை நிலையிலிருப்பார்க்கு நினைவு மாறாதிருக்கவேண்டும். நடப்பார்க்கு வெளிச்சம் துணை நிற்பது போன்று நினைவொன்றுதற்குக் குருமொழி துணை நிற்கும். அதனால் இது பன்மாலையின் பின் வைக்கப்பட்டது. பக்கம் 317 இல் இதனைக் காண்க.
18. "பொன்னை மாதரை" உலகில் பொருளும் வாழ்க்கையும் இன்றியமையாதன என்று கண்ட ஒருவர், அவை நிலையில்லன எனக் காண்பர். காணவே குருமொழி கொண்டு சிவனை எய்துவர். அதனால் இஃது அதன் பின் வைக்கப்பட்டது. நிலையாமை உணர்ந்தாலன்றி நிலைப்பினை யடைதல் இயலாது. அதனால் நிலையாமைக்குறிப்பு இதன்கண் மிகுத்துக் காணப்படுகின்றது. இதனைப் பக்கம் 323 இல் காண்க.
19. "ஆரணம்" மெய்ப்பொருளுணர்ச்சி நிலையாமை உணர்வின் அடிப்படையின் நிகழ்வது. இவ்வுணர்ச்சியை எழுப்புவதற்குத் துணை நிற்பது. இறைவன் நூல்கள் "ஆரண ஆகமம்" என்று பெயர் பெறும். அவை இறைவன் திருவருளால் மெய்யடியார்கள் பாடியனவேயாகும். அவை நால்வர் நற்றமிழ் மறையும் திருமூலர் திருமந்திரமுமாகும். எல்லாம் குருவருளால் கிட்டுதல் வேண்டும். இதனைப் பக்கம் 361 இல் காண்க.