20. "சொல்லற்கரிய" இறைவன் நூலால் பெறப்படும் உண்மைகள் சொல்லற்கரியன, உணர்தற்குரியன. ஓரளவு மட்டுமே அந் நூல்களால் பெறப்படும். அதனால் அஃது அதன் பின் வைக்கப்பட்டது. ஆருயிர்களின் அறிவிற்கு ஆண்டவனின் பேரறிவே நிலைக்களமாகும். இதனைப் பக்கம் 365 இல் காண்க.
21. "வம்பனேன்" குருவருளால் உண்மை உணர்ந்த பின்னும் புன்னெறியிற் செல்லும் போக்கினைக் கண்டு தன்னை நொந்து கூறியது. அதனால் இஃது அதன் பின் வைக்கப்பட்டது. இதனைப் பக்கம் 399 இல் காண்க.
22. "சிவன் செயல்" குற்றமுணர்ந்த கொள்கையர் எல்லாம் சிவன் செயல் என எண்ணி அவன் திருவடியை அடையவே முயல்வர். அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. இதனைப் பக்கம் 375 இல் காண்க.
23. "தன்னை யொருவர்" : இதுவும் முதல்நினைப்பாற் பெற்ற பெயர். சிவபெருமான் தன்னை அன்புடன் நினைவோர்க்குத் தன்னையளித் தருள்வன். இதனைப் பக்கம் 380 இல் காண்க. எல்லாம் சிவன் செயல் என்னும் உண்மையுணர்ந்தோர் அவன் பால் மிக்க அன்பு பூணுவர். அதனால் இஃததன்பின் அமையப்பட்டது.
24. "ஆசையெனும்" : சிவன்பால் மிக்க அன்புடையவர் உலகியற் பொருள்களின்மாட்டு ஒரு சிறிதும் ஆசை கொள்ளார். இஃது அதனை உணர்த்துகின்றது. அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. இதனைப் பக்கம் 389 இல் காண்க.
25. "எனக்கென்ன செயல்" : ஆசை மேலீட்டாற் செய்வதற்குத் தூண்டித் துணை நிற்பது மாயை. அதுவே களவு வஞ்சனை காமமென்றிவை யெல்லாங் காட்டுவது. இத்தகைய மாயையினை அடியேனுடன் பொருத்தினவர் யாவர்? தேவரீர் தான் என்னும் உண்மை தெரிந்தால், எனக்கென்ன செயல் என்பது புலனாகும். ஆசையற்றவர்களே இதன் உண்மையினை உணர்வர். அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
26. "மண்டலத்தின்" : எல்லாம் இறைவன் செயல் என்னும் உண்மையுணர்ந்தோர் மாயாகாரியப் பொருள்களையும் திருவருளால் தன்வழிப்படுத்துப் பயன்பெறுந் தன்மை கூறப்படுகின்றது. அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. இதனைப் பக்கம் 421 இல் காண்க.