32. "முகமெலாம்" : ஆவியும் உடலும் உடைமையும் ஒப்புவித்து அடிமையாகிய ஆருயிர் "முகமெலாங் கண்ணீர் வாரக் கைகூப்பித் தொழும்." அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
33. "திடமுறவே" : உறுதியாக அடிமையைக் காத்தாள வேண்டுங் கடப்பாடு பராபரமாம் சிவபெருமானுக்கே உள்ளது. அதனைப் பெற்றுய்வதற்கு வாயில் வழிபாடேயாம். அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. செந்தமிழ் நான்மறையால் திடமுண்டாந் தன்மை பக்கம் 490 இல் காண்க.
34. "தன்னை" : திடமுண்டாவதற்குத் துணைநில்லாது நிலையில்லாதவற்றை நிலையின வென்று உணரச் செய்யும் நெஞ்சினைக் கடிந்துகொள்வதால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
35. "ஆக்குவை" : செவ்விவாய்த்தற் பொருட்டுச் சிவபெருமான் திருக்குறிப்பால் யாவும் நிகழ்வன என்பது குறிக்கப்படுதலால் இஃததன்பின் வைக்கப்பட்டது.
36. "கற்புறுசிந்தை" : அன்பு நீங்கா உயர்ந்த உலகியல் ஒழுக்கத்திற்கும், மெய்யுணர்வு மேவுதற்கும் கற்புறு சிந்தை மாதரே பொற்புறு துணையாம் மெய்ம்மை காட்டி அடிமையாம் ஆருயிரும் முடிவும் முதலும், வடிவும் வாழ்க்கையும், வினையும் துய்ப்பும், மயக்கமும் மலமும், தியக்கமும் தௌ¤வும் ஒரு ஞான்றுமில்லாத "பிறவா யாக்கைப் பெரியோனும், நுதல்வழி நாட்டத்திறைவனும். நீலமணி மிடற்று ஒருவனும், தென்னாடுடைய சிவனும், எந்நாட்டவர்க்கும் இறைவனும், தென்றில்லை மன்றினுள் ஆடியும், குவளைக் கண்ணி கூறனும், கூடல் இலங்கு குரு மணியும்" ஆகிய சிவபெருமான் ஒருவனே விழுமிய முழு முதல்வன். அவனையே ஆருயிர்க் கொழுநனாகக் கொண்டு, "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"த் தென்றமிழ்த் திருவைந்தெழுத்தோதி வழிபட்டு வழுவாது கற்புடன் நிற்பதே மெய்யடிமையின் செய்ய கடமையாகும். அதனை விளக்குவதால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. இதனைப் பக்கம் 493 இல் காண்க.
37. "மலைவளர் காதலி" : இது கடைக்காப்பாலாய பெயர். சிவபெருமானின் அறிவருளாற்றல் பொதுவும் சிறப்புமாகச் செய்தருளும் செயல்கள் பற்றி "அம்மை, ஆனைமுகன், ஆறுமுகன்" என்னுந் திருப்பெயர்கள் காணப்படும். அம் முறையின் இஃது அருளம்மையின் விளக்கப் பரவுதலாகும். அம்மையைப் பரவுதலும் ஆண்டானைப் பரவுதலேயாம்.