தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xix

பெற்றியன். 2. அக் கடவுள் சிவகாமி அம்மை கண்டுகளிக்கத் திருக்கூத்தியற்றியருளுகின்றனன் என்பதாம். முதல் திருப்பாட்டில் கூறப்படும் சலமகள நடப்பாற்றலாகும். நடப்பாற்றலெனினும் திரோ தான சத்தியெனினும் ஒன்றே. நிலவென்பது ஆருயிரின் அடையாளமாகும். இதனைப் பிள்ளைப் பிறை என்ப. பிள்ளைப் பிறையினைப் பேணி வளர்த்துத் தன் திருவடிக் கீழ்ப் பேரின்பங் கொள்ளச் செய்யும் பெருமான் எவனோ? அவனே பெரிய பெருமான். அவன் திருநீலகண்டமுடைய சிவபெருமான். இவ்வுண்மை முதற்கண் காணப்படும் "வெற்புறுத்த கூற்றட்ட" (37) என்னுந் திருப்பாட்டானுணரலாம். திருச்சடை யென்பது உலகியல் தோற்றத்தையும், திருவடியென்பது உலக வொடுக்கத்தையும் குறிப்பனவாகும். உலகத் தோற்றத்திற்குச் சலமகளும் உலக வொடுக்கத்திற்கு மலைமகளும் காரணராவர்.

     3. "நீக்கி மலக் கட்டறுத்து" என்பது முதல் 7 "பச்சை நிறமாய்ச் சிவந்த" என முடியும் செய்யுட்கள் ஐந்தும் முறையே படைப்பு முதலாம் ஐந்தொழில்களையும் குறிப்பனவாகும். 8. "ஆதியந்தங் காட்டா" எனத் தொடங்குஞ் செய்யுள் சிவபெருமான் ஒருவனே வாலறிவன் ஆவன் என்பதைக் குறிப்பதாகும். வாலறிவு என்பது இயற்கை யுணர்வும் முற்று முணர்தலுமாகும். சிவபெருமானின் அருளாற்றல் அன்பு, அறிவு, ஆற்றல் (இச்சை ஞானம் கிரியை) என விரிவெய்தும். அறிவின் குறிப்பு ஆனைமுகன்; ஆற்றலின் குறிப்பு ஆறுமுகன். அன்பின் குறிப்பு சண்டேசர். இம்மூன்றும் முறையே "கங்கை" என்றும் "அஞ்சு முகம்" என்றும் "தந்தை இருதாள்" என்றும் தொடங்கும் 9. 10. 11 ஆம் செய்யுட்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

     எனவே தெய்வ வணக்கப் பாடல்கள் பதினொன்றுள்ளும் முறையே சலமகள், மலைமகள், ஐந்தொழில், வாலறிவன், ஆனைமுகன், ஆறுமுகன், சண்டீசன் என்னும் நிலைகள் குறிக்கப்படுவன காணலாகும். இவற்றால் சிவபெருமானும், அவன்றன் ஆற்றலும், அடியாரும் அன்புடன் அகத்து உள்கிப் புறத்து இன்புடன் வடிவத்தேற்றி வழிபடுவதே செந்நெறிச் செல்வர்களின் சீர்மையாகும். இம்முறை பல தெய்வ வழிபாடென்றோ? சிறு தெய்வ வழிபாடென்றோ? எண்ணுவது பெரிதும் தவறுடைத்தாகும். இஃது "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" எனவும் "சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்" எனவும் வரும் தனித் தமிழ் மறை முறைகளான் உணரலாம்.