தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxv

 
"கேட்டமுதல் நான்காலே கேடிலா நாற்பதமும்
 
 வாட்டமற எனக்கு வாய்க்குநாள் எந்நாளோ."
 
- தாயு. எந். கரு நிலை - 5.
     இதன் கருவாய்த் திகழ்வது "கேட்டலுடன் சிந்தித்தல்" எனத் தொடங்கும் (8 - 2 - 14) சிவஞானசித்தியாரின் திருப்பாட்டாகும்.

     "முக்கட்குருமணியின்" வழிபாட்டின் சிறப்பினைக் "கல்லால் எறிந்துங்கை" (432) எனத் தொடங்கும் செய்யுளின் வாயிலாக விளக்கினர். மேலும் பக்கம் 118 - 119 இலும் விளக்கப்பட்டுள்ளமையும் காண்க.

 
"நானே கருதின்வர நாடார்சும் மாஇருந்தால்
 
 தானே அணைவார் தன்மைஎன்னோ பைங்கிளியே."
 
- தாயு - பைங்கிளிக்கண்ணி - 33.
     இதன்கண் ''''நானே கருதின்'''' என்பது உலகியல் நாட்டத்திலிருந்து முற்றும் விடுபடாதும், நான் என்பது அடங்காதும் நினைத்தலென்ப. ''''சும்மா'''' இருத்த லென்பது ''''சிவ'''' என இடையறாது நினைந்து அதன்கண் அழுந்தி நிற்பது. இக் கருத்துடன் ஒருபுடை யொத்த திருக்குறள் வருமாறு:

 
"துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
 
 நெஞ்சத்த ராவர் விரைந்து."
 
- திருக்குறள், 1218.
     துஞ்சுதல் - மறத்தல். தோண்மேலராகி - வினைப்பயனை யூட்டுபவராகி. விழிக்குங்கால் - சிவனை இடையறாது நினைக்குமிடத்து. நெஞ்சத்தராவர் - உள்ளத் துறைந்து திருவடிப் பயனைச் சேர்ப்பிப்பர்.

 
"மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டை உன்னிப்
 
 பார்க்கின் அன்பர்க் கென்ன பயங்காண் பராபரமே."
 
- பராபரக்கண்ணி - 128
     இவ்வொரு வரலாறே சிவபெருமானின் விழுமிய முழு முதன்மையினை விளக்குதற்குப் போதிய சான்றாம். இவ்வுண்மையுணர்ந்தே திருவள்ளுவ நாயனாரும் தம் தனித்தமிழ்ப் பொது மறையின்கண் வருமாறருளினர்:

 
"கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 
 ஆற்றல் தலைப்பட் டவர்க்கு."
 
- திருக்குறள், 214.
     இனி முக்கணத்தாலாகிய முத்தேவருள் மாலின் தன்மையினைச் சுட்டுந் திருக்குறள் வருமாறு:

 
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
 
 தாஅய தெல்லாம் ஒருங்கு."
 
- திருக்குறள், 410.