தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxix
 
"நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
 
    நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
 
 சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
 
    செருமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
 
 இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
 
    இமையவர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
 
 நனந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
 
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே."
 
- 6. 14 - 1.
     தாயுமான அடிகள் தம் அரிய பெரிய திருப்பாடல்களாலும், மவுனமடத்துத் தலைமையாலும், தம் மாணாக்கர் அருளையர், கோடிக்கரை ஞானிகள் முதலியோர்க்குப் பயிற்றிய சித்தாந்தப் பயிற்சியாலும் சைவ சமய உண்மைகளை எங்கணும் பரப்பியருளினர். அம்மட்டுமன்றித் திருவருட் காட்சியானும் பரப்பியருளிய உண்மை வருமாறு. திருவிராமேச்சுரம் சென்று சிவ வழிபாடியற்றிக்கொண்டிருக்குங்கால், அங்கு மழையின்மையால், மக்கள் மிகவும் வருந்தினர். அடிகள்பால் முறையிட்டுக் கொண்டனர். அடிகளும் ஆண்டவனருளால் ஒரு நற்றமிழ்ப்பா பாடியருளினர். மழையும் பொழிந்தது. நாடும் செழித்தது. மக்களும் இன்புற்றனர். அது வருமாறு:

 
"சைவ சமயஞ் சமயமெனில் அச்சமயத்
 
 தெய்வம் பிறைசூடுந் தெய்வமெனில் - ஐவரைவென்
 
 றானந்த வின்பில் அழுந்துவது முத்தியெனில்
 
 வானங்காள் பெய்ம்மின் மழை."
     இப் பாடல் ஒன்றே சித்தாந்த சைவ உண்மைகளைத் திறம்பட உணர்ந்து உளங்கொள்வதற்குப் போதியதாகும். தாயுமான அடிகள் திருப்பாடல் சித்தாந்த சைவர்கள் கைக்கொண்டடொழுகவேண்டிய உண்மைக் கொள்கைகளை உரையாணியிட்டு உணர்த்தியருளிய ஒருபெரு பிரமாண நூலாகும்.

     தாயுமான அடிகளின் திருவடி வாழ்க என வாழத்துதல் ஒன்றே அடியேன் செய்யும் முடிவிலா வழிபாடாகும்.

 
"தாயுமா னச்செல்வர் தந்த தமிழ்மணிகள்
 
 ஆயின்சித் தாந்த அருள்விளக்கம் - நோயின்றாம்
 
 மாயைவினை வாயிலின்பாம் வாழ்க மலரடிகள்
 
 வாய்மைச்சித் தாந்தம்வாழ்க."
தி. ஆ. 1997
புரட்டாசி 15
1 - 10 - 1966.
அன்புள்ள,
ப. இராமநாதன்