பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


100


     (பொ - ள்) "கானக . . . சொலுமே" - (அடியேனை ஆண்டருளிய சிவகுருவே நின்திருவருளால் நின்திருமுன்) கடுங்காட்டில் வாழ்கின்ற கொடும்புலியும் (விடுநிலமருங்கில் படுபுல்லார்ந்து அடும்புலிக்கஞ்சி நாடுவாழ்மக்களை நண்ணி அறந்தரு நெஞ்சமொடு சிறந்ததன் தீம்பால் பிறந்தநாட் டொட்டுப் பெருகவழங்கும் அமைதியுடைய) ஆவரகிய பசுவும் (தம்மில் பகையொழிந்து நகையுடையவாய்) ஒன்றோடோன்று அளவளாவி நின்னுடைய திருக்கண் காண மகிழ்ந்து திகழும்; நீ நின்னுடைய திருக்கையால் குறிப்புக் காட்டியருள மதயானையும் தன்னுடைய புழைக்கையதனால் தீ மூட்டற் பொருட்டுப் பெரிய கட்டைகளை எந்திக்கொண்டு அமைதியாக வந்து உரிய இடத்தில் வைக்கும். (திருவருளால் நினைத்ததனைக் கற்பித்துக் கொடுக்கும்) தெய்வப்பசுவாகிய காமதேனுவும் நின் பொன்போலுந் திருவடித் தாமரையில் வணங்கி (உயர்ந்த உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தில்) அமைந்துள்ளேன் என்று விண்ணப்பித்துக் கொள்ளும்.

    "புவிராசர் . . . யென்பார்" - நிலவுலகத்தையாளும் மன்னர் மன்னாகிய வேந்தனும், புலவர் கோமானாகிய பாவலப் பெருமகனும் நின்திருவடியைச் செந்தமிழ்த்திருமறையாம் போற்றித்தொடர் மந்திரத்தால் நற்றவ வேந்தே உனக்கு வெற்றியுண்டாகுக, நீ வெற்றியுடையவனாகுக எனப் புகழ்ந்து பாராட்டி வணங்காநிற்பர்;.

    "ஞானகரு . . . எளிதோ" - மூதறிவும் பேரருளும் தோன்றும் நிலைக்களமாகிய நின் திருமுகச்செவ்வி காணப்பெற்ற நற்பொழுதில் ஒன்பது வகையாக உரைக்கப்படும் முதன்மைச் சித்தர்களும், உன் பெறுதற்கரிய பெருநட்பினைப் பெரிதும் விரும்புவர்; சுகர் வாமதேவர் முதலாகச் சொல்லப்படுகின்ற மெய்யுணர்வு கைவந்த மூதறிஞர்களும் உன்னை நனிமிகப் புகழ்ந்து கொண்டாடுவர். விண்ணுள்ளாரும் மன்ணுள்ளாரும் விரைந்துவந்து எதிர்வணக்கம் புரிந்துநிற்பர். அத்தகைய உன்னுடைய பேரருட் பெருமையை எவர்க்கும் சொல்ல எளிதாமோ?

        "மந்த்ர . . . குருவே" -

     (வி - ம்) கானகம் - காடு. நெகிடி - தீமூட்டுதல். போனகம் - உயர்ந்த உணவு. சய - வெல்க.

    தனித்தமிழ்ப் "போற்றி போற்றி" என்னும் பெருமந்திரம் புகன்று விரும்பி நறுமலர் தூவி வழிபடுவதே தலையாய வழிபாடென்னும் முறைமையினை வருமாறுணர்க :

"ஆக்கை யாற் பயனென் - அரன்
    கோயில் வலம்வந்து
 பூக்கையா லட்டிப் போற்றியென் னாதவிவ்
    ஆக்கையாற் பயனென்."
- 4. 9 - 8
.