எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் | யாதினும் அரிதரிதுகாண் | இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ | எதுவருமோ அறிகிலேன் | கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட் | ககனவட் டத்தில்நின்று | காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு | கலந்துமதி யவசமுறவே | பண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே | பதியா யிருந்ததேகப் | பவுரிகுலை யாமலே கௌரிகுண் டலியாயி | பண்ணவிதன் அருளினாலே | விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே | வேண்டுவே னுமதடிமைநான் | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே. |
"கண்ணக . . . நன்மை" - இடமகன்ற இந்நிலவுலகத்து எளியேன் இவ்வுடம்போடு இருக்கின்ற காலத்துத் திருவருளின் பெருவெளியில் நின்று இடையறாது காலூன்றிப் பொழிகின்ற பேரின்பப் பெருமழையுடன் இரண்டறக் கலந்து எளியேன் அறிவு (என்வயமிழந்து) அதன் வயம் ஆகும் வண்ணம் பண்ணியருள்வது பெருநன்மையாகும்;
"இந்நிலை . . . நான்" - இத்தகைய பெருநிலை (எளியேன் உணர்வின் கண்) அழுந்தப் பதியும்வரை உயிர் தங்கும் நிலைக்களமாகவுள்ள இவ்வுடம்பு ஆடிவரும் பவுரிக்கூத்துக் குலைந்துபோகாமல், மூலத்திடத்துப் பாம்புபோல் மண்டலித்துக் கௌரியாகிய குண்டலி அம்மை என்று சொல்லப்படும் பண்ணவியின் (எண்ணரிய) திருவருளால், அறிவுப் பெருவெளியின்கண் நீங்காது நிலைபெற்றிருக்கின்ற திங்களினிடத்துள்ள அமிழ்தமானது தட்டுத்தடையின்றி மட்டிலாது பொழியவே நின் திருவடித் தொண்டனாகிய எளியேன் (அடிபணிந்து) வேண்டிக் கொள்வேன்.
"வேதாந்த . . . சித்தர்கணமே"