பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


154


     (பொ - ள்) "காராரும் . . . பாய்ச்சி" - (சொல்லவும் நினைக்கவும் ஒண்ணாத) பேரிருள் நிறைந்த ஆணவமென்று சொல்லப்படும் பெருங்காட்டை வேரொடும் அறக்களைந்து வெளியாக்கி (யான் என தென்னும் செருக்காகிய) அகங்காரமென்னும் கல்லை முற்றும் பிளந்து மனமென்று சொல்லப்படும் நன்னிலத்தைத் துப்புரவு செய்து வெளி காணும்படியாகத் திருத்தி, மேலும் மேலும் நிலவுலகத்தாரால் அறியப்படாத பேச்சற்ற நிலையென்னும் மோனவிதையைப் பதித்து, (அருளுக்கு வித்தாகிய) அன்பு என்னும் தூய நன்னீரை நன்றாகப் பாய்ச்சி,

    "அது . . . மயமே" - அம் மோனமாகிய வித்துச் செவ்வையாகப் பயிராகுமட்டும், மாமாயை என்று சொல்லப்படும் வலிய பறவைகள் சிறிதும் அணுகாதபடி நன்கு காத்துத் (தாம் செய்யவேண்டிய நற்றவ முயற்சியளவில்) சிறிதும் குறைவில்லாமல் அதனால் விளைந்துள்ள இன்ப நுகர்வாகிய, போகத்தினைத் திருவருளால் நுகர்ந்துய்ந்த நின் திருவடிக்காளாம் மெய்யன்பர்தம் திருக்கூட்டத்தினை அடியேன் அடையும்படி நின்திருவருள் முன்நின்று காத்தருள்வதே அத் திருவருட்குப்பொறுப்பாகும். எக்காலத்திலும் எவ்வகைப்பட்டுயர்ந்தோர், எவரானும் அறிகற்கரியதாய், மிகவும் நுண்மையான அறிவுப் பெருவெளி என்று சொல்லப்படும் சிதாகாயத்தில் வெளிப்பட்டருளும் நாலாம் நிலையாகிய துரியவடிவமே.

        "அண்டபகி . . . . . . மானபரமே

     (வி - ம்) கார் - கருமை; இருள். ஆணவம் - தொன்மலமுனைப்பு. அகங்காரம் - முனைப்பின் செய்கை. பார் - உலகம். பாரம் - பொறுப்பு. துரியம் - நாலாம் நிலை.

    ஆணவமலம் மிக்க பேரிருள் என்பதை வருமாறுணர்க :

"ஏகமாய்த் தங்கால எல்லைகளின் மீளும்
    எண்ணரிய சத்தியதாய் இரு ளொளிர இருண்ட
 மோகமாய்ச் செம்பிலுறு களிம்பேய்ந்து நித்த
    மூலமல மாய்அறிவு முழுதினையும் மறைக்கும
 பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி
    பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது பரிந்து
 நாகம்மா நதிமதியம் பொதிசடையான் அடிகள்
    நணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே."
- சிவப்பிரகாசம், 20.
"ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும்
 இருபொருளுங் காட்டா திது."
- திருவருட்பயன், 22,
(6)