பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

229
பாடாது பாடிப் படித்தளவில் சமயமும்
    பஞ்சுபடு சொல்லன்இவனைப்
  பார்மினோ பார்மினோ என்றுசபை கூடவும்
    பரமார்த்தம் இதுஎன்னவே
ஆடாதும் ஆடிநெஞ் சுருகிநெக் காடவே
    அமலமே ஏகமேஎம்
  ஆதியே சோதியே எங்குநிறை கடவுளே
    அரசே எனக்கூவிநான்
வாடாது வாடுமென் முக வாட்டமுங்கண்டு
    வாடா எனக்கருணைநீ
  வைத்திடா வண்ணமே சங்கேத மாவிந்த
    வன்மையை வளர்ப்பித்ததார்
தேடாது தேடுவோர் தேட்டற்ற தேட்டமே
    தேடரிய சத்தாகிஎன்
  சித்தமிசை சூடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "பாடாது . . . . . . . . . நெக்காடவே" - (பயனின்மையால் பாடற்குத் தகுதியற்ற) பாடற்கு உரிமையில்லாத பாடல்களைப் பாடி, அவைபோன்றவற்றைப் படித்து வெளிவந்துள்ள அளவில்லாத சமயத்தவர்கள் அடியேனைப் பார்த்து (பொருட்டிட்பநுட்பமில்லாத) பஞ்சுபோன்ற நொய்ம்மையான சொல்லைச் சொல்லித் திரிகின்ற இவனொருத்தன் என என்னைச் சுட்டிக் காட்டிப் பாருங்கள், பாருங்கள் என்று கூட்டமாகச் சபை கூடவும் (அடியேன்) நனிமிக மேலானது இதுவே என்று, விடாது ஆடல் புரிந்தும், உள்ளமுருகி நெகிழ்ந்து ஆட;

     "அமலமே . . . கண்டு" - (இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய) மாசிலாமணியே! ஒப்பில்லாத ஒருமுதலே! எளியேங்கட்கு ஆதிகாரணமாயிருப்பவனே! பேரொளிப் பிழம்பே! எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்ற கடவுளே! எம்மை ஆட்கொண்டு செலுத்தும் வேந்தே எனப் பலவாக அழைத்து (அருள்பெறாமையால்) எவருங்கொள்ளாத வாட்டத்தை எளியேன் கொண்டு வாடுகின்றேன்; வாடும் எளியேன் வாட்டமுகத்தை அடிகள் கண்டிருந்தும்;

     "வாடா . . . . . . தேட்டமே" - (அடியேனை நோக்கி) வாடுதல் செய்யாதே என்று நின்திருவருளை எளியேன்பால் வைத்திடா வண்ணம் ஏற்பாடாக இத்தகைய வன்கண்மையை நின்பால் வளர்ப்பித்தவர் யாவர்? இடைவிடாது, வேறொன்றுந் தேடாது நின்னையே தேடும் மெய்யுணர்வினர்க்கும் தேடப் பெறாத உடனாய் நிற்கும் அழியாப் பெருஞ்செல்வமே;