பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

231
     (பொ - ள்) "பிரியாத . . . . . . அருளினை" - ஒருகாலமும் நீங்காத மிகவும் குளிர்ச்சியான திருவருட் சிவஞானியாக எழுந்தருளிவந்து சொல்லுதற்கு மூச்சடக்கும் அகத்தவப் பயிற்சியால் நினைவொருமையுண்டாக்கிப் (பெறற்கரிய) பேரின்ப வுண்மையினை (அடியேற்கு) அளித்தருள் செய்தனை; எளியேன் மனமடங்கும்படி, பேரம்பலப் பெருங்கடவுளாகி, வாலறிவே வண்ணமும் வடிவுமா யிருந்திடும் மேலாம் அறிவொலியினைக் காட்டி (உறுதோறுயிர்தளிர்க்கும்) அருளமுதப் பெருவெள்ளப் பெருக்கின் பேற்றினை அளித்தருளினை;

     "அலாது . . . . . . அளித்தனை" - அல்லாமலும் திருவம்பல வடிவாகி எளியேனை ஆட்கொண்டருளினை; பின்வந்து எய்திய முறைமையாய் (பெறற்கரும்) குறிக்கோளினையும் அருளிச் செய்தனை;

     "நன்மரவுரி . . . . . . யாவனோ" - நல்ல மாசில்லாத மரவுரி எனப்படும் சீரையினைத் தாங்கிய அறவாழி அந்தணத் திருக்கோலமாய் எழுந்தருளிவந்து (உணர்வுக்குணர்வாய் உண்ணின்றுணர்த்தும்) ஒரு மொழியெனப்படும் ஒலித்தற்கில்லாத (உணர்தற்குரிய) ஒப்பில் பெருமறை (அசபா)யின் பெருநலங் காட்டியருளினை. பின்பு பேச்சற்ற மௌனியாகிச் சிவனே என்றிருக்கும் பெருநெறியினைக் கூட்டியருளினை; இத்துணைத் திருவருட்பேறுகள் அனைத்தும் திருவருளால் எய்தியிருக்க அறிவிலாச் சிறியேன் பயிற்சிவயத்தால் மயக்கம் எய்திப் பின்னும் அறிவின்மைக்கு உள்ளாவனோ? (ஆகவொட்டாது திருவருள் புரிந்து காத்தருள்வாயாக.)

         "தேடரிய . . . ஆனந்தமே" -

     (வி - ம்.) வாசி - உயிர்மூச்சு. (பிராணாயாமம்). நாதம் - அருள் நாதம். ப்ரவாகம் - வெள்ளம். குறி - இலக்கு; பெறவேண்டிய குறிக்கோள். அசபா - செபிக்கப்படாதது; உணரப்படுவது.

     முழுமுதற்சிவபெருமான் மலச் செவ்வியுற்றவிடத்துக் குருவாய் எழுந்தருள்வன். அவ்வுண்மை சிவஞானியாய் என்பதனாற் காண்க. அக்குரு அகத்தவப்பயிற்சியால் முதல்வன் இயல்பை விளக்குந் தன்மை வாசியென்னும் குறிப்பாற் காண்க. மேலும் மெய்களெனப்படுந் தத்துவங்களைக் கடந்து அறிவாய் நின்று அன்பறிவு ஆற்றல்கள் எனப்படும் இச்சை ஞானம் கிரியையாகிய விட்டு நீங்காத் திருவருள் ஆற்றலின் ஆயிரக்கூறான வுண்மையினை அறிவாயிருந்திடும் நாத ஒலி என்பதனால் விளக்கினர். பின் உச்சித் தொளையாகிய பிரமரந் திரத்திலுள்ள அமிர்தவெள்ளத்தை நிரப்பியமை அமிர்தவெள்ளம் என்பதனால் விளக்கினர். திருவருளுடன் இரண்டறக் கலந்திருக்கும் உண்மையினையும் அதற்கு வாயிலாகவுள்ள ஒருமொழிமறையினை உணர்த்துவதும் பிறவும் நெறியாற் கூட்டினை என்பதனால் விளக்கினர்.

     "அசபா" மந்திரமென்பது ஓரெழுத்தொருமொழி. அஃது அனைத்து மந்திரங்கட்கும் அடிப்படையாகவுள்ளது. அது விழுமிய முழுமுதற் சிவனைக் குறித்து நிற்பது. வரிவடிவிற் காட்ட வொண்ணாதது. ஒலிமுதலாகிய விந்து வென்னும் தூமாயையில் தோன்றும்