பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர் | பொறிபுலன் அடங்குமிடமே | பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம் | போனஇட மென்பர்சிலபேர் | நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர் | நட்டநடு வேயிருந்த | நாமென்பர் சிலர்உருவ மாமென்பர் சிலர்கருதி | நாடில்அரு வென்பர்சிலபேர் | பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர் | பேசில்அரு ளென்பர்சிலபேர் | பின்னும்முன் னுங்கெட்ட சூனியம தென்பர்சிலர் | பிறவுமே மொழிவர்இவையால் | பாதரச மாய்மனது சஞ்சலப் படுமலால் | பரமசுக நிட்டைபெறுமோ | பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற | பரிபூர ணானந்தமே. |