பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

26

     (பொ - ள்.) 'பூதலய . . . . . . என்பர்சிலபேர்' - ஐம்பெரும் பூதங்களும் ஒடுங்குதற்கு முதற்காரணமான மாயையே. முதலென்பர் சிலர்; பொறிகள் ஐந்தினாலும் கவரப்படும், புலன்களாகிய நுகர்பொருள்கள் ஐந்தும் ஒடுங்குமிடமே முதற்பொருள் என்பர் சிலர்; சிலர் அகக்கலன்களாகிய அந்தக்கரணங்கள் ஒடுங்குமிடமே முதற்பொருளென்பர்; சிலபேர் முக்குணமும் ஒடுங்குமிடமே முதற்பொருளென்பர்;

     'நாதவடி . . . . . . என்பர்சிலபேர்' - (முப்பத்தாறாம் மெய்யாகிய) ஒலிமுதல் எனப்படும் நாதவடிவமே முதற்பொருளென்பர் சிலர்; சிலர் முதல் ஒலியாகிய விந்து வடிவமே முதற்பொருளென்பர்; நடுவாக இருந்த ஆருயிர்க ளெனப்படும் நாமே முதற்பொருளென்பர் சிலர்; சிலர் உருவப்பொருளே முதற் பொருளென்பர்; சிலபேர், நன்றாக ஊன்றி ஆராயுமிடத்து அருவப் பொருளே முதற் பொருளென்பர்.

     'பேதமற . . . . . . மொழிவர்' - வேற்றுமை கெட்டொழிய உயிர் உணர்வாகிய சிற்றறிவு ஒழிந்தகன்ற இடமே முதற் பொருளென்பர் சிலர்; சொல்லுமிடத்துத் திருவருளே முதற் பொருளென்பர் சில பேர்; அந்தமும் ஆதியும் இல்லாத பாழே முகற்பொரு ளென்பர் சிலர்; வேறு நிலைகளையும் முதற்பொருளென மொழிவர் சிலர்;

     'இவையால் . . . . . . . பெறுமோ' - இவற்றால் பாதரசம் போன்று (அடியேன்) மனமானது (ஒரு நிலைப்படாது) வேகமான அசைவினை அடையுமே அன்றி மேலான இன்பத்தைப் பயக்கும் நிட்டையினை அடையுமோ?

         'பார்க்குமிட . . . ணானந்தமே'

     (வி - ம்.) இலயம் - ஒடுக்கம். பொறி - இந்திரியம். புலன் - பொறிகளால் பற்றப்படும் பொருள்; விடயம். கரணம் - அந்தக்கரணம். அடங்குமிடம் - ஒடுங்குமிடம். குணம் - முக்குணம். பேதமற - வேற்றுமை கெட. உயிர் - உயிருணர்வு; சீவபோதம். பின்னும்முன்னும் - அந்தமும் ஆதியும். சூனியம் - பாழ்; விளங்காமை. சஞ்சலம் - விரைந்த அசைவு; பாதரசம் - இரசம்; நிலையில்லாது ஓடும் ஒருவகைப் பொருள்.

     அந்தக்கரணம்: மனம் (சித்தம்), எழுச்சி (அகங்காரம்), இறுப்பு (புத்தி), குணம் - தலை, இடை, கடை; அமைதி, ஆட்சி, அழுத்தல்; உணர்வு, உழைப்பு, ஊறு; சாத்துவிகம், இராசதம், தாமதம். சூனியம் - பாழ்; விளங்காதிருப்பது.

     1. நிரீச்சுரசாங்கியம் (கடவுள் வேண்டாத் தத்துவக் கணக்கியம்) வித்து முதலியவற்றுக்கு வேண்டுந்துணைகள் சேர்ந்ததும் வேறொன்றை அவாவாமல் தானே முளை தோன்றுவது போன்று முக்குணத்தன்மை வாய்ந்த மூலப்பகுதியினின்று உலகம் தானே தோன்றி நின்றொடுங்கும். இதற்கொரு வினைமுதல்வன் வேண்டப் படுவானல்லன். வினைமுதல்வன் ஒருவன் உளனாயின் அவனின் வேறாய்ப் பிரகிருதி மாயை என ஒன்று வேண்டப்படுவதில்லை. ஆதலின் மாயையே முதலென்பர். அவர் கொள்கை வருமாறு: