பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

27

"மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி
 தூல சூக்கம் பரமாய்ச் சுத்த புருடன் சன்னிதியில்
 பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய் புரிந்தொடுங்கும்
 சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே."
- சிவஞானசித்தியார், பரபக்கம் - 260.
     2. பாடாணவாதிகள் பொறிகளாற் கவரப்படும் புலன்களாகிய விடயங்கள் ஒடுங்கிக் கற்போற் கிடப்பதே பொருளென்பர். அது வருமாறு:

"கொத்தை மாந்தர் உய்த்திடு துயில்போற்
 காட்சி யென்னக் காணாத் துயர
 மாட்சியை முத்தி யெனவகுத் தனரே."
- சங்கற்ப நிராகரணம், பாடாணவாதி - மூல.
     3. சங்கிராந்தவாதி (கரணமுடிவு) ஆருயிர்கட்குச் செவ்வி வாய்ந்த இடத்துக் கண்ணாடியிற் காட்டின நிழல் அந்தக் கண்ணாடியிற் பொருந்தினாற் போல முதல்வனுடைய அருள் ஆன்மாவிலே விளங்கிய இடத்து விறகைப் பொருந்தின தீப்போலவும், உயிரின் சிற்றுணர்வும் சுட்டுணர்வும் கெட்டுச் (பசுத்துவம்) சிவபெருமானின் முற்றுணர்வுத் தன்மையாய்க் கரணங் கெட்ட சித்தியே பொருளென்பர். இவ்வுண்மை வருமாறு காண்க:

"நீங்காது . . . . . .
 பழமலம் நீங்க நிகழுங் காலை
 ஏற்றோர் முகஒளி தோற்றும் கலனெனத்
 தலைவன தருளுயிர் நிலவிடும் நிலவக்
 காட்டத் தங்கி மாட்டத் தங்கிய
 தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும்
 போன்றது வாகித் தோன்றிடும் அதனால்
 பசுகர ணங்கள் சிவகர ணங்க
 ளாக மாறி அறிவும்
 ஏக மாம்உயிர் யானென தின்றே."
- சங்கற்பநிராகரணம், வரி. 13 - 21.
     4. முக்குணமும் போன இடம் பொருளென மொழிவார் இயல்பு மிக விரிவாகச் சிவஞானசித்தியார் பரபக்கத்துள் நிகண்ட வாதிமதம் கூறுமிடத்துக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.

     5. 'நாதவடி வென்பர்' - சத்தப்பிரமவாதி, ஓசை யாகிய சத்தமானது மயக்கத்தினால் உலகமாமெனவும், அறியாதார் பொருளும் ஓசையாகிய சத்தத்திற்கு உண்டென்று எண்ணுவது மெய்யன்றா மெனவும், ஓசையே கடவுளெனவும், பொருள்வேறாக ஒன்றில்லையென அறியும் அறிவே வீட்டின்பமா மெனக் கூறி நாதமே முதல் என்பர். இவ்வுண்மை வருமாறு காண்க: