புறப்புறம் - உலகாயதம், (பௌத்தர்), மாத்தியமிகர், யோகாசாரர் சௌத்திராந்திகர், வைபாடிகர், ஆருகதர் என ஆறு.
புறம் - தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என ஆறு.
அகப்புறம்: பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என ஆறு.
அகம்: பாடாணவாதம், சிவசமவாதம், சங்கிராந்த வாதம், ஈசுர அவிகார வாதம், நிமித்த காரண பரிணாம வாதம், சுத்த சைவம் என ஆறு.
புறப்புறத்தார் இறையுண்மை கொள்ளாதவர். புறச் சமயத்தார் கண்ணன் முதலிய நம்போன்ற உயிர்களையே கடவுள் என்பார். அகப்புறத்தார் பாசுபதம் முதலிய திருக்கோலங்களையே கடவுள் எனக் கொள்பவர். அகச்சமயத்தார் சிவபெருமான் திருவடிப்பேற்றின் உண்மை யியைபினை உணராதவர். இவற்றை வருமாறுணர்க :
| இறையுண்மை யில்லார் இறையுயிரே என்பார் |
| இறைகோலம் பேற்றியைபில் லார். |
என்பார் என்பதனை இறைகோலம் என்பதனோடுங் கூட்டுக.
அறிவடையாளக் கையின் உண்மை வருமாறு :
ஆருயிர்களின் செய்கை அனைத்திற்கும் பேருயிராகிய சிவபெருமானின் கண்ணுதல் எனப்படும் திருவுள்ளக் குறிப்பு அடிப்படையாகும். அடிப்படை யென்பது நாம் எண்ணும் எண்ணங்களை முன்னோ பின்னோ நிறைவேற்றி வைத்தருளும் அந்தண்மை அவன்பாலுள்ளது. அது நோயாளியின் நோய்க்குக் தக்க மருந்து கொடுப்பது மருத்துவனின் கடமையாவதை யொக்கும். உயிர்களின் மல நோய் முனைத்து எண்ணும் எண்ணமே அவ்வுயிர்க்கு நோயாகும். அது நீக்க மருந்து கொடுப்பதே கண்ணுதல் திருக்குறிப்பாகும். மருந்தே இருவினையாம். இதுபோல ஆணடவன் திருவடிப் பேற்றிற்கும் அவன் திருவுள்ளக் குறிப்பு முன்னாதல் வேண்டும்.
உயிரின் அடையாளமாகிய சுட்டு விரல் உயிர்க்குயிராகிய சிவ பெருமானின் அடையாளமாகிய பெருவிரலுடன் புணர்தல் வேண்டும். அப் புணர்வினுக்குப் பெருவிரலும் சுட்டு விரலும் ஒருங்கு வனைந்து வந்து உடங்கு புணர்தல் வேண்டும். அங்ஙனம் புணர்ந்தாலும் ஒன்றழிந்து ஒன்றாயிற்றென்று கூறல் ஒவ்வாது. வேறுபட்ட இரண்டு என்று கூறவும் முடியாது. அதனால் இரண்டற்ற ஒன்றுறென்றே இசைப்பர். இரண்டற்ற ஒன்றெனினும் பிரிவிலா இரண்டிணை ஒன்றெனினும் ஒன்றே. இதுவே அத்துவிதம் என்று வழங்குவதன் மெய்க் கருத்தாகிய தாற்பரியமாகும். "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்னுங் கருத்து அவன்றன் திருவுள்ளக் குறிப்பின்றி ஏதும் நிகழாதென்பதேயாம். இவ்வுண்மை வருமாறு உணர்க :