சன்மார்க்கமாகிய நன்னெறி வீடுபேற்றினை நேரே எய்துவிக்கும் ஒரே நேர்வழி. ஏனைய நெறிகளெல்லாம் படிப்படியாகப் பயில்வித்து உயர்த்தி முடிவில் நன்னெறிக்கண் நாட்டுவிக்கும். நன்னெறியின் விழுமிய முழு முதல்வனைப் பத்திமிகுந்து வழிபட்டு அழிவில் வீடுபேற்றினை எய்தி உய்ந்தவர் எண்ணிலார். அவருள் சிலர் திருப் பெயர் வருமாறு :
"யோகிகள், சித்தர்கள், தீட்சிதர்கள், வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், சிவகணங்கள், பிரமன், விண்டு, இந்திரன், உருத்திரர், இருடியர், சாம்பவர், பாசுபதர், மகாசைவர்."
(11)
சன்மார்க்கம் ஞானமதின் பொருளும் வீறு | சமயசங்கே தப்பொருளுந் தானென் றாகப் | பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை | பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்த போதங் | கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன | எச்சமயத் தவர்களும்வந் திரைஞ்சா நிற்பர் | கன்மார்க்க நெஞ்சமுள எனக்குந் தானே | கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும். |
"சன்மார்க்க . . . கண்டதில்லை" - சன்மார்க்கம் எனப்படும் சித்தாந்த சைவமாகிய நன்னெறியின்கண் உய்யும்வழி காட்டும் தெய்வமெய்யுணர்வும், அதனால் பெறப்படும் பொருள்களும், "கூவலாமை"1 போன்று தாந்தாமே மேலெனத் தம்பட்டமடித்து இறுமாப்புக் கொண்டு அவரவர்கள் தங்கள் தங்கள் சமயங்களும், அச் சமயங்களின் குறியீடுகளாகிய சங்கேதப் பொருள்களும், வேற்றுமையின்றி ஒன்று பட்டிருக்க ஓரிடத்துக் காணப்படும். இம்முறையாகக் காணப்படுந் தன்மை உலகின்கண் காணப்படும் பல நெறிகளிலும் கண்டதில்லை.
"பகர்வரிய . . . நிற்பர்" - சொல்லுதற்கரிய தில்லையம்பலத்தின்கண் திருவருளால் சென்று காதலால் உற்று நோக்கும் போது அவ்விடத்து வேறுபட்டதாகக் காணப்படும் எந்த நெறியும் யாரும் காண்பதற்கில்லை. எல்லாம் எல்லாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய அறிவுப் பெருவெளியே முதன்மையாகக் காணப்படும் என்று உளங்கொண்டு கடவுள் உண்மை கொண்ட எல்லாச் சமயத்தவரும் வந்து தலைவணங்கித் தொழுவர்.
"கன்மார்க்க . . . காண்டலாகும்" - கல்லியல்பு வாய்ந்த வன் னெஞ்சமுடைய அடியேனுக்கும்தான் திருச்சிற்றம்பலமாகிய பொன் மன்றினைத் திருவருளால் காணும் பெரும்பேறு வாய்த்தமையான், கண்ட அப்போதே பேரின்ப வுணர்வு பெருகுவதாகும்.
(வி - ம்.) வீறு - இறுமாப்பு. சங்கேதம் - ஏதாவது ஒரு தொடர்பு பற்றிச் சிலருக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறி, சமய சங்கேதம் - சமயத்தார்
1. | 'அருமறை ஆ'. சிவஞான சித்தியார், 8. 2 - 4. |