ஆசையென்பது பற்றப்படும் பொருளைப் பற்ற வேண்டுமென உள்ளத்தெழும் பெருவேட்கை. அவ் வேட்கை அப் பொருளைப் பற்றினால் நீங்கிவிடும். பற்றாவிடில் பெருந்துன்பமாகவே இருந்து கொண்டிருக்கும். அதனால் 'ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்' எனும்மறைமொழி எழுந்தது. எனவே "கூடுமன்பினில் கும்பிடலாகிய" இறைபணியை முறையுறச் செய்யின் திருவடி தானே வந்து பொருந்தும். இந்நிலையில் ஆசையென ஒன்று எழுவதற்கே யிடமின்று மேலும் வேறாநிற்கும் நிலையில் ஆசையும் ஒன்றாய்ப்புணரும் நிலையில் இன்பமுமாம்.
பாராதி யண்டமெலாம் படர்கானற் சலம்போல் | பார்த்தனையே முடிவில்நின்று பாரெதுதான் நின்ற | தாராலும் அறியாத சத்தன்றோ அதுவாய் | அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாவை கண்டாய் | பூராய மாகவுநீ மற்றொன்றை விரித்துப் | புலம்பாதே சஞ்சலமாப் புத்தியைநாட் டாதே | ஓராதே ஒன்றையுநீ முன்னிலைவை யாதே | உள்ளபடி முடியுமெலாம் உள்ளபடி காணே. |
"பூராய . . . காணே" - முதலும் முடிவுமாகவும் நீ வேறொன்றை விரித்துப்புலம்பி வருந்தாதே; மனதைக் கவலைகொண்டு அறிவினை நாட்டாதே, நீ எப்பொருளையும் முன்னிலைப் படுத்திச் சுட்டிப் பார்த்தல் செய்யாதே, திருவருள்வழி நிற்கின் எல்லாம் உள்ளபடி செவ்விதின்முடியும். இஃது உண்மையாகும்.
(5)