உள்ளபடி யென்னவுநீ மற்றொன்றைத் தொடர்ந்திட் | டுளங்கருத வேண்டாநிட் களங்கமதி யாகிக் | கள்ளமனத் துறவைவிட்டெல் லாந்துறந்த துறவோர் | கற்பித்த மொழிப்படியே கங்குல்பக லற்ற | வெள்ளவெளிக் கடல்மூழ்கி யின்பமயப் பொருளாய் | விரவியெடுத் தெடுத்தெடுத்து விள்ளவும்வா யின்றிக் | கொள்ளைகொண்ட கண்ணீருங் கம்பலையு மாகிக் | கும்பிட்டுச் சகம்பொயெனத் தம்பட்ட மடியே. |
"கங்குல்பகல் . . . அடியே" - நினைப்பும் மறப்புமற்ற நிலையாகிய கங்குல்பகலற்ற மாசற்ற திருவருள் வெளிக் கடலுள்ளே மூழ்கிப் பேரின்ப வண்ணமாகிய அம் மெய்ப் பொருளினுள் அடங்கி அப்பொருளேயாய் நிற்றல் வேண்டும் என எடுத்து எடுத்துப் பல்கால் மொழிதற்கும் வாயில்லாமல், மிகுதியாகிய கண்ணீரும் மெய்ந்நடுக்கமும் கொண்டு இருகைகளையும் உச்சியின்மேற் குவித்துக் கும்பிட்டு, இவ்வுலகம் நிலைநில்லாத் தன்மையாகிய பொய்ம்மையினையுடைத்து எனப் பறையறைவாயாக.
(6)
அடிமுடியும் நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டால் | அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது | குடிமுழுதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த | கோலமெல்லாம் நன்றாகுங் குறைவுநிறை வறவே | விடியுமுத யம்போல அருளுதயம் பெற்ற | வித்தகரோ டுங்கூடி விளையாட லாகும் | படிமுழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப் | பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் வருமே. |
(பொ - ள்) "அடிமுடியு . . . நன்றாகும்" - முதல், நடு, முடியெனப்படும் தோற்றம் கொண்டால் மெய்ப்புணர்ப்பாகிய பேரின்பக் கலப்பு மனம் உண்டாகும்; திருவருளால் நம் குலமுழுவதும் திருவடிப் பேற்றினுக்குரிய நன்னெறிவழியாக உய்யும் வழியுமுண்டாகும். ஒரு சிறு குறைபாடும் உண்டாகாது; எடுத்துக்கொண்ட கோலங்களனைத்தும் மிகவும் நன்மை எய்தும்.