இவ்வுண்மை வருமாறு :
| "அல்ல லென்செயு மருவினை யென்செயுந் | தொல்லை வல்வினைத் தொண்டன்றா னென்செயுந் | தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் | கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே." | | - 5. 1 - 4 | | | |
(49)
நாத கீதன்என் நாதன்முக் கட்பிரான் | வேத வேதியன் வெள்விடை யூர்திமெய்ப் | போத மாய்நின்ற புண்ணியன் பூந்திருப் | பாத மேகதி மற்றிலை பாழ்நெஞ்சே. |
(பொ - ள்) பாழ்மனமே! இனிய இசையோசைக்குரிய எம்மான், எளியேனுக் குரிய தலைவன், முக்கண்முதல்வன், மறையருள் மறையோன், வெள்ளிய தூய ஆனேற்று உணர்வினை ஊர்ந்தருளும் மெய்யுணர்வாய் நின்றருளும் புண்ணியவடிவினன் ஆகிய சிவபெருமானின் செம்மலர் நோன்றாளாகிய திருவடிகளே நிலைத்த புகலிடமாகும். வேறு புகலிடம் யாண்டும் யாவர்க்கு மில்லை.
(50)
மற்று னக்கு மயக்கமென் வன்னெஞ்சே | கற்றை வார்சடைக் கண்ணுத லோன்அருள் | பெற்ற பேரவ ரேபெரி யோர்எலாம் | முற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே. |
(பொ - ள்) வலிய கற்போன்ற நெஞ்சமே! உனக்கு இன்னமும் மயக்கமுண்டாகுவதற்குக் காரணம் யாது? அடர்ந்த திருச்சடையினையுடைய கண்ணுதலோனின் திருவருள்பெற்றவரே உயர்வற உயர்ந்த பெரியவராவர்; அவர்களே அருமறைப் பொருளனைத்தும் ஓர்ந்தவுணர் வினராவர்.
(51)
| உரையி றந்துளத் துள்ள விகாரமாந் |
| திரைக டந்தவர் தேடுமுக் கட்பிரான் |
| பரைநிறைந்த பரப்பெங்ஙன் அங்ஙனே |
| கரைக டந்தின்ப மாகக் கலப்பனே. |
(பொ - ள்) பேச்சற்று, மனத்துள்ளே திரைபோல் தோன்றும் பல வெளி நினைவாம் வேறுபாடற்றுக் கடந்து அருள் நிலையில் நின்றவர் திருவருளால் தேடும் மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமானின் அறிவாற்றல் நிறைந்துள்ள மேலிடமெங்கும் எல்லையில்லாத பேரின்பப் பெருவெள்ளத்தே அவ்வருளால் அடியேனுங் கலந்தின்புறுவேன்.
(வி - ம்.) நால்வர் முதலாயினார் திருவுள்ளமும் உரையும் திருவருள் வழிநின்று செயற்பட்டமையால் அவை திருவருள் மயமே யாம். அதனால் அவர்களும் அவற்றைக் கடந்தவரேயாவர்.