பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

346
     இவ்வுண்மை வருமாறு :

"பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
 காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
 மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
 கரணம்போல் அல்லாமை காண்."
- திருக்களிற்றுப்படியார், 12.
(52)
 
கலந்த முத்தி கருதினுங் கேட்பினும்
நிலங்க ளாதியும் நின்றெமைப் போலவே
அலந்து போயினம் என்னும் அருமறை
மலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் சோதியே.
     (பொ - ள்) அருமை மிக்க மறைகளைத் திருவாய் மலர்ந்தருளிய மூன்று திருக்கண்களையுமுடைய மாணிக்கப் பேரொளியே! நின் திருவடிக்கண் வேறறநின்று புணர்ந்த மெய்ப்பேற்றினைக் கருதினும், கேட்பினும், நிலங்கள் முதலிய ஐம்பூதங்களும் எம்மைப் போலவே சொல்லொணாதென்று சொல்லுமே.

(53)
 
சோதி யாதெனைத் தொண்டருட் கூட்டியே
போதி யாதவெல் லாமௌப் போதிக்க
ஆதி காலத்தி லுன்னடிக் காந்தவம்
ஏது நான்முயன் றேன்முக்கண் எந்தையே.
     (பொ - ள்) மூன்று திருக்கண்களையுடைய எந்தையே! அடியேனைச் சோதித்தலாகிய அளத்தலைச் செய்தருளாது; வலிய ஆட்கொண்டு போதியாதன வெல்லாம் மெள்ளப்போதித்தருளினை; அந் நிலையினை அடியேன் எய்துதற்கு முற்காலத்தில் நின் திருவடிக்காம் நற்றவம் ஏது யான் முயன்றுள்ளேன்? மெள்ள என்பது மௌ எனக் குறைந்து நின்றது.

(54)
 
எந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே.
     (பொ - ள்) அடியவர்கள் நின்திருவருள் முனைப்பால் கொள்ளும் மனநோக்கத்தையும், நாடுங் கருத்தினையும், கருத்தறிந்து முடிக்கும் பேரருளால் முடித்து வைத்துக் காத்தருளும் அந்தண்மை சேரும் மூன்று திருக்கண்களையுடைய காரண முதல்வனே! எக்காலத்தும் ஈன்று காத்தருளும் தாயென எழுந்தருளிவந்து அடியேனை ஆட்கொண்டருளிய நின்னுடைய சிறந்த திருவருள் வாழ்க வென்று வழுத்தி உள்குவேன்.

(55)