தோன்றியொடுங்கும் தன்மைத்தாகிய இவ்வுலகம் கண்கட்டு வித்தையெனப்படும் இந்திர சாலம் என வுண்மையாக வெண்ணி நின் திருக்கோலத்தினைக் கொடியேன் நாடுவது எந்நாளோ? இந்திர சாலம் தோன்றும்பொழுதே இல்லையாவது. உலகம் காரணத்தில் என்றும் பொன்றாதிருப்பது, காரியம் தோன்றி நின்று மறையும் தன்மையால் இந்திரசாலம் என்று கூறப்பட்டது.
(61)
கொடிய வெவ்வினைக் கூற்றைத் துரந்திடும் | அடிக ளாம்பொரு ளேருனக் கன்பின்றிப் | படியி லேழைமை பற்றுகின் றேன்வெறும் | மிடியி னேன்கதி மேவும் விதியின்றே. |
(பொ - ள்) மிக்க கொடுமை வாய்ந்த தீவினை என்கிற கூற்றை ஓட்டும் பேராற்றல் வாய்ந்த கடவுளாகிய மெய்ப்பொருளே! நின் திருவடிக்கு நிலையான அன்பு செய்யாத புன்மையால் அடியேன் இவ்வுலகில் ஏழைமை எனப்படும் அறியாமையை அறிவெனப் பற்றுகின்றேன். ஒன்றும் கிட்டாத வறுமையையுடையேன்; மேனிலையடையும் முறைமையும் இல்லாதவனாகின்றேன்.
(62)
விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட | மதியை யும்விதித் தம்மதி மாயையில் | பதிய வைத்த பசுபதி நின்னருள் | கதியை எப்படிக் கண்டு களிப்பதே. |
(பொ - ள்) (ஆருயிர்கள் செய்துகொண்ட இருவினைக் கீடாகப் பயன் துய்த்தற்கு வேண்டிய) விதியையும் விதித்து, அவ்விதியின் படி நடந்துகொள்ளுமாறு அடியேனையும் உடலுடன் பொருத்தி, அவ்வுடலின்கண் மதியாகிய புத்தியையும் அமைத்து, அப் புத்தியினையும் மாயையில் பதியவைத்து நீங்காது உடனின்று நிகழ்த்துவிக்கும் ஆருயிர்கட்குரிய இறையே! நின் திருவருட் பெருநிலையினைக் கண்டு பெருமகிழ்வு கொள்ளுவது எப்படி?
(63)
கண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப் | பண்டும் இன்றுமென் பால்நின் றுணர்த்திடும் | அண்ட னேயுனக் கோர்பதி னாயிரந் | தெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே. |
(பொ - ள்) (காணும் தன்மை வாய்ந்த கண் ஒரு பொருளைக்) கண்டவிடத்து உடனாய் நின்று காட்டித் துணை புரியும் கதிரவனையொத்துத் தொன்றுதொட்டு முற்காலத்திலும் இப்பொழுதும் அடியேன்பால் முத்திறப்புணர்ப்பால் உடனின்று உணர்த்தியருளும் முதல்வனே! நின் திருவடிக்குப் பதினாயிரம் கும்பிடு செய்கின்றேன்; அடிமையின் நிலையிலாப் பிறவிக்கு வித்தாம் பொய்யொழுக்கத்தினை நீக்கியருளவேண்டுமென.