பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

397
திருவருள் நெறியினைத் தொடர்ந்து பற்றி நாடி, நல்லார்களாகிய செம்பொருட்டுணிவினராந் திருக்கூட்டத்தகத்தே அடியேனை இருக்கவைத் தருளினை. அதன் பயனாயுள்ள நல்ல நெஞ்சமும், அதன்கண் விளையும் திருவடிப் பேறாம் நன்னலமும் அடைவேனோ?

(24)
சாக்கிரமா நுதலினிலிந் திரியம் பத்துஞ்
    சத்தாதி வசனாதி வாயு பத்தும்
நீக்கமிலந் தக்கரணம் புருட னோடு
    நின்றமுப் பான்ஐந்து நிலவுங் கண்டத்
தாக்கியசொப் பனமதனில் வாயு பத்தும்
    அடுத்தனசத் தாதிவச னாதி யாக
நோக்குகர ணம்புருடன் உடனே கூட
    நுவல்வர்இரு பத்தைந்தா நுண்ணி யோரே.
    (பொ - ள்.) புருவ நடுவாகிய நுதலின்கண் ஆவி நின்று தொழிலுறும் நிலை நனவு நிலையாகும்; அதற்குரிய கருவிகள் முப்பத்தைந்து அவை வருமாறு:- பொறிகள் பத்து, ஓசை முதலாகச் சொல்லப்படும் அறிதற்காம் புலன்கள் ஐந்து, பேசல் முதலாகச் சொல்லப்படும் செய்தற்காம் புலன்கள் ஐந்து, உயிர்க்காற்று முதலாகச் சொல்லப்படும் வாயுக்கள் பத்தும், விட்டு நீங்காது ஒட்டி அண்மையாகவுள்ள நாட்ட முதலாகச் சொல்லப்படும் அகக்கலன்கள் நான்கும், ஆள் ஒன்றும் ஆக முப்பத்தைந்துங் காண்க.

    விளங்குகின்ற கழுத்தினிடத்து நிகழ்வது கனவு. அதற்குரிய கருவிகள் இருபத்தைந்து: வாயுக்கள் பத்து, ஓசை முதலாகச் சொல்லப்படும் அறிதற்புலன்கள் ஐந்து, போல் முதலாகச் சொல்லப்படும் செய்தற் புலன்கள் ஐந்து, இவற்றொடு காணப்படும் அகக்கலன்கள் நான்கு, ஆள் ஒன்று ஆக இருபத்தைந்து இங்ஙனம் சொல்லப்படும் கருவிகள் இருபத்தைந்தென நுண்ணியோர் கூறுவர்.

     (வி - ம்.) சாக்கிரம் - நனவு. நுதல்-நெற்றி, நெற்றிப்புருவம். இந்திரியம்-பொறி. சத்தம்-ஓசை. ஆதி-முதலாக. வசனம்-பேசல். வாயு-காற்று. அந்தக்கரணம்-அகக்கலன். புருடன்-ஆள். கண்டம் - கழுத்து. நுவலுதல்-சொல்லுதல்.

முப்பத்தைந்தின் விளக்கம்
 
    1. அறிதற்கருவி ஐந்து : - 1. செவி, 2. மெய், 3. கண், 4. வாய் மூக்கு இவற்றால் அறியப்படும் புலன்கள் ஐந்து. புலன்கள் எனினும் விடயங்கள் எனினும் ஒன்றே. அவை, வருமாறு : -

     1. ஒசை, 2. ஊறு, 3. ஒளி, 4. சுவை, 5. நாற்றம்.

    2. தொழிற்கருவி ஐந்து : - 1. வாய், 2. கால், 3. கை. 4. எருவாய், 5. கருவாய். இவற்றால் செய்யப்படுந் தொழில்கள் ஐந்து, அவை முறையே : - 1. பேசல், 2. நடத்தல், 3. கொடுத்தல், 4. கழித்தல், 5. மகப்பெறல்.