காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற | கண்ணிலாக் குழவியைப்போற் | கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங் | காப்பிட் டதற்கிசைந்த | பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல் | பெலக்கவிளை யமுதமூட்டிப் | பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற | பெரியவிளை யாட்டமைத்திட் | டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட் | டிடருறஉறுக்கி இடர்தீர்த் | திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில் | இசைந்துதுயில் கொண்மின்என்று | சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |
(பொ - ள்) "காரிட்ட . . . . . . அமுதமூட்டி" - கருமையாகிய ஆணவ மலத்தால் அமைந்துள்ள கரு இல் என்று சொல்லப்படும் சிறு வீட்டில் அறிவு விளங்குவதற்குச் சிறிதும் வழியில்லாத கண்ணில்லாத பச்சிளம் பிள்ளையைப்போல், கட்டுப்பட்டுக் கிடந்த எளியேங்களை வெளியில் வருமாறு பணித்தருளி (நீக்கமுடியாத) பெருந்துன்பத்தினைக் காவலாக வைத்து, (உயிர்ப்பெனப்படும் மூச்சினை அகத்து வாங்குதலும், புறத்து விடுதலும் ஆகிய செயல்களை இடையறாது செய்யும் இயல்பினால்) வெளிவந்து காவலுடன் நிற்கும் நிலையில் அதற்குப் பொருந்திய பெயராகிய 'ஆருயிர்' எனப் பெயரிட்டு, (கற்றாரும் கல்லாருமாகிய அனைவர்களும் ஒருங்கு) மெய்யென்று பெருமைபடப் பேசப்படும் வீணான நிலையில்லாத பொய்யுடல் வலுவுடன் நிலை நிற்கும்படி (அவ்வுடல் வளர்ச்சிக்கு வேண்டும்) இருவினையென்று சொல்லப்படும் அமிழ்தினை நுகரவூட்டி;