(பொ - ள்) "போதமா . . . நின்அருள்" - (இயற்கைப் பேரறிவுப் பிழம்பாம்) வாலறிவே தன் உண்மை வடிவாகி, முதலும் நடுவும் முடிவுமாகிய தென்று சொல்லப்படாத நிறைவாகி, இயற்கைத் தூய்மையதாய், வேறுபாடு ஏதும் இல்லதாய், போக்கும் வரவும் இல்லாத பேரின்பப் பெருநிலையாய், நின்றருளுகின்ற நின் குறைவிலா நிறைவே நிலைத்த அடைக்கலப் பேரிடமாய்க் கொண்டு (அடியேன்) அதன்கண் பெருவேட்கை கொள்ளாதபடி எளியேன் அறிவினை மறைப்பதும் நின் திருவருளே;
"பின்னு . . . நின்னருள்" - மேலும் அடியேனுடைய (மலமறைப்பாம்) அறியாமையை (படிமுறையான்) தீர்த்தருளி (முப்பொருளுண்மை தெளிவிக்கும் முறைநூல் வழியாக) மெய்ப்பொரு ளுணர்த்தி நின்றருள்வதும் நின்னருளே;
"ஆகில் . . . .முதலே" - அவ்வாறாயின் அடியேனுக்கு அறிவென்பது யாதோ? அறிவில்லாமல் குற்றமுண்டாந் தன்மை யாதோ? அவ்வினைகட்கு நிலைக்களமாகிய உடல் ஏது? அடியேனுக்குள்ள அன்பு எனப்படும் இச்சைக்குரிய தலைமைப்பாடு அடியேனுக்குச் சிறிதும் இன்றாகும். இம்மை மறுமை என்னும் ஈரிடத்தும் அடியேனுடைய மயக்கம் நீங்கும்படியாக, நின்மெய்யான திருவருளினைக் கொண்டு இனி எளியேனுக்கு அறிவித்துத் தொழும்பனாக அடியேனைக் கொண்டருள் வையோ? முடிந்த முடிவான பெறுபேற்றின் முழுமுதலே.
"சிரகிரி . . . . குருவே"
(வி - ம்) போதம் - அறிவு. ஆதரவு - வேட்கை; விருப்பம். ஏதம் - குற்றம். இச்சை - அன்பு. சுதந்திரம் - தலைமை; தன்வயமுடைமை. காயம் - உடம்பு.
ஆருயிர்கட்கு ஆணவச் சார்பாம் தன்முனைப்புள்ள காலத்து முதல்வன் நடப்பாற்றலாகிய மறைப்பாற்றலால் உலகில் நுகர்வுகளைப் பெரிதாகக் காட்டித் தன்னை மறைத்தருள்வன். சிறிது சிறிதாகத் தன்முனைப்பு ஒடுங்கச் செய்து திருவருள் நாட்டத்தை மிகுவித்து வனப்பாற்றலாகிய பேரருளால் தன்னையுணர்வித்துத் தன் திருவடியில் கூட்டியருள்வன். பச்சை விறகின் உள்ளிருக்கும் தீ அவ் விறகு காயும் வரையும் தான் மறைந்துநின்று காய்ந்ததும் மேலோங்கி மிளிர்வது இதற்கொப்பாகும்.
ஆருயிர்கட்கு மறைப்பினைச் செய்வதும் சிறப்பினை அருள்வதும் இறைவன் திருவருளே என்னும் உண்மையினை வருமாறுணர்க:
| "அழிப்பிளைப் பாற்ற லாக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம் |
| கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம ஒப்பில் |
| தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானும் |
| பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடின் அருளே யெல்லாம்." |
| - சிவஞானசித்தியார், 1. 2 - 9. |
ஆருயிர்கள்பால் குற்றவியல்பாய் ஒட்டி அவ்வுயிர்களின் அன்பறிவாற்றல்களை மறைத்துக்கொண்டு நின்ற ஆணவமலத்தைப் போக்கி