(வி - ம்.) பார்-நிலம். இலயம்-ஒடுக்கம். வருஷித்தல்-பொழிதல். வீடை-ஆனேறு. தாரணை-பொறைநிலை. மேரு-பொன்மலை.
அயன் மால் முதலிய தேவர்கள் என்று சொல்லப்படும் உயிரினங்கள் மாண்டு மடியுந் தன்மையரே. அவ்வுண்மை "நூறு கோடி பிரமர்கள்" எனத் தொடங்கும் (பக்கம் 18) திருமாமறையான் உணரலாம். பூதங்கள் ஒடுங்குங் காலத்துண்மையினை வருமாறுணர்க:
| "உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும் |
| இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் |
| உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக் |
| கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே." |
| - 8. மெய்யுணர்தல். 8. |
தாரணை யென்பது பொறைநிலை. அக்குறிப்பு வருமாறு :
| "மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை" |
| - தொல்காப்பிய மேற்கோள். |
| "நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்' - தொல். பொருள். 75. |
1. இயமம், 2. நியமம் 3. ஆசனம், 4. வளிநிலை, 5. தொகை நிலை, 6. பொறைநிலை. 7. நினைதல், 8. சமாதி.
இயமம் - அடக்கம். நியமம் - நாட்கடன். ஆசனம் - இருக்கை.
| "அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்தப் |
| பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து |
| தெரிந்த மனாதிசத் தாதியிற் செல்லத் |
| தரித்தது தாரணை தற்பரத் தோடே." |
| - 10. 577. |
சிவனருள் பெற்றோர் எந்நிலையிலுங் கலங்கார்;
| "வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் |
| தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் |
| மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் |
| டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே." |
| - 4. 113 - 8. |
(3)