பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


155


வானாதி பூதமாய் அகிலாண்ட கோடியாய்
    மலையாகி வளைகடலுமாய்
  மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி
    வான்கருணை வெள்ளமாகி
நானாகி நின்றவனு நீயாகி நின்றிடவு
    நானென்ப தற்றிடாதே
  நான்நான் எனக்குளறி நானா விகாரியாய்
    நானறிந் தறியாமையாய்ப்
போனால் அதிட்டவலி வெல்லஎளி தோபகல்
    பொழுதுபுகு முன்கண்மூடிப்
  பொய்த்துகில்கொள் வான்தனை எழுப்பவச மோஇனிப்
    போதிப்ப தெந்தநெறியை
ஆனாலும் என்கொடுமை அநியாயம் அநியாயம்
    ஆர்பால் எடுத்துமொழிவேன்
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.
     (பொ - ள்) "வானாதி . . . . . . . . அற்றிடாதே" - வானமுதலாகச் சொல்லப்படும் பூதங்கள் ஐந்துமாகி, மேலும், கோடிக்கணக்கான எல்லா அண்டங்களுமாய் (வானளாவநிற்கும் பெரிய) மலைபாகி (உலகினைச் சூழ்ந்து ஆடை போற் காணப்படும்) வளைந்த கடலுமாகி, (இரவின்கண் ஒளிதரும்) திங்களாகி, (பகற்கண் ஒளிதரும்) ஞாயிறாகி, மற்றும் உலகின்கண் காணப்படும் எல்லாப் பொருள்களுமாகி, பேரருட் பெருவெள்ளமுமாகி, நானென நிற்கின்ற நிலையும், நீயாகி நின்றிடச் செய்கின்ற நிலையும், நான் எனத் தோன்றும் ஆணவமுனைப்பும் அற்றிடாமல்;

    "நானா . . . . . . மொழிவேன்" - (செய்திகள் எல்லாவற்றிலும்) நான் நான் எனக் குளறுதல் செய்து, பலவகையாக வேறுபட்டு (அம் முனைப்பு நீங்காமையான்) அடியேன் அதனை அறிந்தும் அறியாமையாய்ப் போய்விட்டால் அஃது என்னுடைய பார்வைக் கெட்டாத தன் வலியாகும்; அதனை அடியேனால் வென்று கொள்ளுதற்கு எளிமையாகுமோ? பகற்காலம் தோன்றியது மறையும் முன்பே (நின்திருவருளை உளங்கொண்டு) அடியேன் கண்கள் இரண்டினையும் நன்றாக மூடிப் பொய்த்துயில் கொண்டிருப்பவனை, (எவர்களேனும்) எழுப்ப இயலுமோ? இத்தகைய முறையில் இனி விரித்து விளக்கி வீறு பெறுவது எந்நெறியை? எந்த நாளிலே? ஆயினும் (அடியேன்) என்னுடைய கொடுமையை நினைக்கின் அஃது அறமுறையன்று; அறமுறையன்று. இப் பொல்லாங்கை எளியேன் எவரிடஞ் சென்று கூறுவேன்?