என்பெலாம் நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்பஉடல் | இளகமன தழலின்மெழுகாய் | இடையறா துருகவரு மழைபோ லிரங்கியே | இருவிழிகள் நீரிறைப்ப | அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙனே | அமிர்தசஞ் சீவிபோல்வந் | தானந்த மழைபொழிவை உள்ளன்பி லாதஎனை | யார்க்காக அடிமைகொண்டாய் | புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு | புலைக்குடிலில் அருவருப்புப் | பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன் | புந்திசெலு மோபாழிலே | துன்பமா யலையவோ உலகநடை ஐயவொரு | சொற்பனத் திலும்வேண்டிலேன் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |