பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

22

அருளாகிய முதல்வன் திருவாணையின்றிக் காரியப்பாடு எய்துவதில்லை என்பதே. அங்ஙனமன்றி மாயை என்பது இல்பொருளென்றோ, அல்லது அருளே மாயா காரியப் பொருள்களாகிய உலகமும் உலகியற் பொருள்களுமாகத் திரிந்ததென்றோ கூறுவது சிறிதும் பொருந்தாது.

     மாயையின் உண்மையினை வரும் திருப்பாட்டுகளானுணர்க:

"அருவினி லுருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி
 உருவினி லுருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம்
 பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்1
 ஒருவனே யெல்லா மாகி அல்லவாய் உடனு மாவன்."
- சிவஞானசித்தியார், 1. 1 - 27.
     முதல்வன் ஆணையினால் நிகழும் இவ்வுலகியல் நிகழ்ச்சி ஆருயிர்களின் மலப்பிணிப்பால் நேர்ந்துள்ள பெருந் துன்பத்தினைப் போக்கித் தன் திருவடியாகிய அளவில் பேரின்பினை அவ்வுயிர்கள் துய்த்தற் பொருட்டேயாம். அவ்வுண்மை வருமாறு காண்க:

"ஏற்றஇவை அரனருளின் திருவிளையாட் டாக
    இயம்புவர்கள் அணுக்களிடர்க் கடல்நின்றும் எடுத்தே
 ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக
    உரைசெய்வர் ஒடுக்கம்இளைப் பொழித்தல்2 மற்றைத்
 தோற்றமல பாகம்வரக் காத்தல் போகம்
    துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும்
 போற்றலரும் அருள் அருளே அன்றி மற்றுப்
    புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே."
- சிவப்பிரகாசம், 18.
     ஆருயிரின் அன்பினை ஏற்று ஆண்டவன் இன்பமளிக்கின்றான் அவ்வுயிர்க்கு. அதனால் அன்பின் விளைவே இன்பமென்ப.

"மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
    புலனைந்தின் வழியடைத் தமுதே
 ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
    உள்ளவா காணவந் தருளாய்
 தேறலின் தெளிவே சிவபெரு மானே
    திருப்பெருந் துறையுறை சிவனே
 ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
    இன்பமே என்னுடை அன்பே."
- 8. கோயிற்றிருப் - 1.
செருக்கற்றா லன்றிச் செம்மலர் நோன்றாளைச் சேர ஒண்ணாது. அவ்வுண்மை வருமாறு காண்க :

 
 1. 
'நித்தமாய்.' - சிவஞானசித்தியார், 2. 3 - 3. 
 2. 
'அழிப்பிளைப்.' - சிவஞானசித்தியார், 1. 2 - 9.