பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

220
தாங்குபவன் தானாம் பிறைசூடி ஏறூர்ந்து
தாங்கப் படுபவனுந் தான்.
     முதல்வன் எல்லாமாய் நிற்கும்முறைமை வருமாறு :

"அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
 அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
 மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம்
 அப்பொருளுந் தானே அவன்"
- 11. காரைக்-அற்புதத் - 20
"அப்பனீ அம்மைநீ ஐயனும்நீ
    யன்புடைய மாமனு மாமி யும்நீ
 ஒப்புடைய மாதரு மொண்பொ ருளும்நீ
    யொருகுலமுஞ் சுற்றமும் ஓரு ரும்நீ
 துய்ப்பனவு முய்ப்பனவுந் தோற்று வாய்நீ
    துணையா யென்னெஞ்சம் துறப்பிப் பாய்நீ
 இப்பொன்னீ இம்மணிநீ இம்முத்துநீ
    இறைவனீ ஏறூர்ந்த செல்வன் நீயே."
- 6. 95 - 1.
(10)
 
கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
    குளிர்தீம் புனற்கைஅள்ளிக்
  கொள்ளுகினும் அந்நீ ரிடைத்திளைத் தாடினுங்
    குளிர்சந்த வாடைமடவார்
வந்துலவு கின்றதென முன்றிலிடை யுலவவே
    வசதிபெறு போதும்வெள்ளை
  வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர
    மகிழ்போதும் வேலையமுதம்
விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும்
    வேளையிலும் மாலைகந்தம்
  வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்
    விளையாடி விழிதுயிலினுஞ்
சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து
    தமியேனை ரட்சைபுரிவாய்
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதானந்த சிவமே.