பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

253
எவ்வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர்
    எனக்கு ழைந்துருகி நம்மையாம்
  இதமு ரைப்பஎன தென்ற யாவையும்
    எடுத்தெ றிந்துமத யானைபோல்
கவ்வை யற்றநடை பயில அன்பரடி
    கண்டதே அருளின் வடிவமாக்
  கண்ட யாவையும் அகண்ட மென்னஇரு
    கைகுவித்து மலர் தூவியே
பவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம்
    விழியு திர்ப்பமொழி குளறியே
  பாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது
    பாவையொத் தசைத லின்றியே
திவ்ய அன்புருவ மாகி அன்பரொடும்
    இன்ப வீட்டினி லிருப்பனோ
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "எவ்வுயிர்த் . . . . . . நடைபயில" - உலகிடைக் காணப்படும் (ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாகவுள்ள) அனைத்துயிர்க் கூட்டமும் அடியேனுடைய உயிர் போன்றனவே என்று மெய்ம்மையாக நினைந்து (அவற்றுக்கு ஒரு சிறிய துன்பம் நேர்ந்தாலும் தீயிடைப்பட்ட மெழுகென) மனம் நெகிழ்ந்து உருகி (அவற்றுக்கு) நன்மை யுண்டாகும்படி இனிய சொற்களை உரைக்கவும், (அனைத்துயிர்கட்கும் பயனாம்படி முதல்வனால் அளித்தருளப்பட்ட அவன்றன் உடைமைகளாகிய பொருள்களைத் தன்னதென்று கருதிக் கடும்பற்றுக் கொள்ளுதல் தவறு, (அங்ஙனமின்றிச் சிறிதும் பற்றில்லாமல்) கண்ட பொருள்களை மதயானையானது ஏதுங் கருதாமல் எடுத்து எறிவதுபோல் துன்பமில்லாமல் பிறர்க்குதவும் இடையறா இன்ப ஒழுகலாறு பயிலவும்;

     "அன்பரடி . . . தூவியே" - (நின் திருவடிப் பேறுபெற்று நின்பின் நுழைந்து நின் உருவாய்த் திகழ்ந்து வரும் அடியராகிய) மெய்யன்பர் தம் திருவடியினைக் காண நேர்ந்தபோதே (உடலினைக் கண்டபோது உயிர் நினைப்பும், உறையினைக் கண்டபோது உள்ளுறைவதன் நினைப்பும் உடன் தோன்றுவது போன்று) அத் திருவடி நின் திருவருள் வண்ணமாய் உள்கி (அத் திருவருட் பாவனையால்) எங்கணும் காணப்படும் பொருள் அனைத்தும் (அத் திருவருளின் தொடர்புண்மை நினைவால்) திருவருட் பெருவடிவமென மெய்ம்மையாகக் கருதிக் காதலால் உச்சிமேற் கைகுவித்து (போற்றித் தொடர் புகன்று) நறுமண மலர்களை நயமுறத் தூவி;