1. சைவவாதி, 2. பாடாணவாதி, 3. சிவசமவாதி, 4. சங்கிராகதவாதி, 5. ஈகர அவிகாரவாதி, 6. நிமித்தகாரண பரிணாமவாதி என்ப. இச் சமயங்களுள் அகச் சமயத்தை ஆக்கிய சான்றோர் திருவருள் அவரவர் செவ்விக்கேற்பக் காட்டியருளிய மெய்யெனப்படும் தத்துவங்களைத் தாந்தாங் கண்டவாறே கொண்டு நூல்வாயிலாக நுவன்று விளக்கினர். அகப்புற நெறியினை அவ்வாறே இறைநூற் கலையாகிய உவமையிலாக் கலைஞான வல்லார் தாந்தாம் அறிந்தவாறே ஆக்கினர். புறநெறியினை உலக நூல் வல்லார் அவ்வாறே ஆக்கினர். புறப்புற நெறியினை உலக நூல்களில் மிக்கு வன்மையில்லாதார் தம் தமக்குத் தோன்றியவாறு புனைந்துள்ளனர். இவ்வுண்மை வருமாறு :
"அருமறைஆ கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான் அளப்பரிதாம் அப்பொருளை அரன்அருளால் அணுக்கள் தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளவில் தர்க்கமொடுத் தரங்களினாற் சமயஞ்சா தித்து மிருதிபுரா ணங்கலைகள் மற்றும் எல்லாம் மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம் சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொ ணாதே" - சிவஞானசித்தியார், 8. 2 - 9
இவற்றை வருமாறு நினைவு கூர்க :
மெய்யுணர்ந்தோர் கூறலகம் மேவுகலை வல்லார்சொல் செய்ய அகப்புறமாம் தேர்ந்துணர்ந்த - வையத்தார் ஆக்கு நெறிபுறமாம் அல்லார் புறப்புறமாம் நோக்கு சிவனெறிமேல் நோக்கு.
இறையுண்மை யில்லார் இறையுயிரே என்பர் இறைகோலம் பேற்றியைபில் லார்.
மெய்யுணர்ந்தார் - தத்துவங்களையுணர்ந்தோர். இறைகோலம் என்பார் என என்பார் என்பதனைக் கோலம் என்பதனுடனும் கூட்டிக் கொள்க. இறையுண்மையில்லாதார் புறப்புறத்தார் பிறந்திருந்து உழலும் கண்ணன் முதலியோரைத் (உடையானல்லாதாரை உடையானென மயங்கித்) தெய்வமாக வழிபடுவோர் புறச் சமயத்தார். முழு முதல்வனாம் சிவபெருமான்றன் நீங்கு நிலையாம் தடத்தக்குறியே உண்மை (சொரூபம்) இயல்பு வாய்ந்த சிவபெருமான் நிலை எனக் கொண்டு மெய்ம்மை நோக்காதார் அகப்புறச் சமயத்தார். சிவபெருமான்றன உண்மைநிலையோர்ந்தும் திருவருளால் அவன் திருவடிக்கீழ்ப் புணர்ந்து தலைமறைவினுடன் "அயரா அன்பின் அரன்சுழல் செலும்" முறைமை நீங்காது ஆண்டான் அடிமைத் திறத்துடன் பேரின்பந் துய்க்கும் பேற்றியைபில் வேறுபட்ட கோட்பாட்டினர் அகச்சமயத்தார்.