பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

280
நானென்னும் ஓரகந்தை எவர்க்கும் வந்து
    நலிந்தவுடன் சகமாயை நானா வாகித்
தான்வந்து தொடருமித்தால் வளருந் துன்பச்
    சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார்
ஊனென்றும் உடலென்றுங் கரண மென்றும்
    உள்ளென்றும் புறமென்றும் ஒழியா நின்ற
வானென்றுங் காலென்றுந் தீநீ ரென்றும்
    மண்ணென்றும் மலையென்றும் வனம தென்றும்.
     "நானென்னு . . . வல்லார்" - எத்தகையோர்க்கும் நான் நான் என்று செருக்குற்று எழும் கொடிய அகந்தை வந்து பொருந்துதலும் தினவுடையவன் தன்மை போன்று வேட்கையுண்டாகும்; அவ் வேட்கை வருத்தம் எழலும் மாயாகாரியமாகிய உலகமும் உலகியற் பொருள்களும் பலவாகி வந்து விடாது தொடர்ந்து அலைக்கும்; அதனால் பிறவிப்பெருங்கடற் பெருந்துன்பம் பெருகும். அத் துன்பக்கடலின் பெருமையைச்சொல்லவல்லார் யாவர்?

     "ஊனென்றும் . . . வனமதென்றும்" - (அதனால்) ஊனாகிய தசையென்றும், அத் தசைபொதி உடலென்றும், அவ் வுடலகத்துக் காணப்படும் கலன்களாகிய கரணங்களென்றும், அகம் புறம் என்றும், நீங்காது நின்ற வானென்றும், காற்றென்றும், தீயென்றும், நீரென்றும் நிலமென்றும், மலையென்றும், வளம் பொருந்திய காடென்றும் (மாயாகாரியம்) ஒன்றையே உறுப்பு வேறுபாட்டால் இங்ஙனம் கூறுவர். இஃது உடம் பொன்றையே உறுப்பு வேறுபாட்டால் பலபடக் கூறுவதனோடும் உடையொன்றையே உடுக்கும் வேறு பாட்டால் பலவாகக் கூறுவதனோடு மொக்கும். ஆங்காரத்தியல்பு வருமாறு :

"ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய்
 ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியா னென்ன தென்றே
 நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர்
 பாங்கார்பூ தாதி வைகா ரிகந்தைச தந்தான் என்றே"
- சிவஞானசித்தியார். 2. 3 - 1
(15)
 
மலைமலையாங் காட்சிகண்கா ணாமை யாதி
    மறப்பென்றும் நினைப்பென்றும் மாயா வாரி
அலையலையா யடிக்குமின்ப துன்ப மென்றும்
    அதைவிளைக்கும் வினைகளென்றும் அதனைத் தீர்க்கத்