நிற்கவும், மறையவும் செய்கின்றீர்; இங்ஙனம் சிறிதும் தவறுதலில்லாது நடந்து வருமாறு இந்நிலையில் உங்களை நிறுத்தியவர் யாரென வினவுவேன்; அவர்தம் அளவிடப்படாத பெருமைதான் என்னே எனவும் வினவுவேன்.
"அடிக்கின்ற . . . என்பேன்" - தவிர்தலில்லாமல் ஒழுங்காகவும், கூடுதல் குறைதல் உளவாகவும் வீசிக்கொண்டிருக்கும் காற்றே; உன்னை இம்முறையாக நடந்து வருமாறு ஏற்படுத்தியவர் யார்? யாவராலேதான் நீ அவ்வாறு நடக்கின்றாய் என்பேன், விட்டு நீங்காது சுழன்று கொண்டிருக்கிறா யென்பேன்.
"பெய்கின்ற . . . என்பேன்" - வளம் பொருந்திய வாழ்வுறப் பெய்கின்ற முகில்களே! எம்மை யாட்கொண்டருளும் செம்பொருளாம் சிவபெருமான். உங்களைப்போல் மிகுதியாகத் தண்ணளி பொழியும்படி அடியேங்கள் செய்துகொள்ள வேண்டிய உறுதுணையாம் பயிற்சி யாதெனச் சிறிது கருத்துக் கொண்டு சொல்லுங்களென்பேன்.
(26)
கருதரிய விண்ணேநீ எங்கு மாகிக் | கலந்தனையே யுன்முடிவின் காட்சி யாக | வருபொருளெப் படியிருக்குஞ் சொல்லா யென்பேன் | மண்ணேயுன் முடிவிலெது வயங்கு மாங்கே | துரியஅறி வுடைச்சேடன் ஈற்றின் உண்மை | சொல்லானோ சொல்லென்பேன் சுருதி யேநீ | ஒருவரைப்போல் அனைவருக்கும் உண்மை யாமுன் | உரையன்றோ உன்முடிவை உரைநீ என்பேன். |
(பொ - ள்) "கருதரிய . . . என்பேன்" - (கண்டபொருளையே கருதுதலுங் கூடும் காணாப் பொருளையும் கண்ட பொருளின் ஒப்புமையில் வைத்துக் கருதவுங் கூடும் அங்ஙனமன்றி நுண்மையதாய் இயங்குவதைக் கொண்டு இயக்குவதைக் கருதுதல், கருதுதலன்று கருத்திற் கோடலேயாம். இம்முறையில்) கருதரிய வானமே நீ எல்லாவற்றிற்கும் இடங்கொடுத்துக் கொண்டு எங்குமாகி எவற்றினூடும் கலந்து நிற்கின்றனையே; உனக்குமேலாய் உன்முடிவின்கண் காட்சியளிக்கின்ற மேலாக வருகின்ற பொருள் எப்படியிருக்கு மென எளியேங்களுக்குச் சொல்லாயோ என்பேன.
"மண்ணே . . . சொல்லென்பேன்" - மண்ணினை நோக்கி மண்ணே நீ சென்று முடியுமிடத்து உனக்கும் அப்பால் விளங்கிக் கொண்டிருக்கும் விழுப்பொருள் யாது என்பேன்; அவ்விடத்து மேலான அறிவு வாய்க்கப் பெற்று, (எல்லாரானும் புகழ்ந்து போற்றப்படும்) ஆதி சேடனாகிய நாகத்தலைவனும் முடிந்த முடிவான ஒன்றை முன்வந்து உனக்கு மொழியானோ? நீ சொல்வாயாக என்பேன்.