அந்தகா ரத்தையோர் அகமாக்கி மின்போல்என் | அறிவைச் சுருக்கினவரார் | அவ்வறிவு தானுமே பற்றினது பற்றாய் | அழுந்தவுந் தலைமீதிலே | சொந்தமா யெழுதப் படித்ததார் மெய்ஞ்ஞான | சுகநிட்டை சேராமலே | சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு | தூங்கவைத் தவரார்கொலோ | தந்தைதாய் முதலான அகிலப்ர பஞ்சந் | தனைத்தந்த தெனதாசையோ | தன்னையே நோவனோ பிறரையே நோவனோ | தற்கால மதைநோவனோ | பந்தமா னதுதந்த வினையையே நோவனோ | பரமார்த்தம் ஏதுமறியேன் | பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற | பரிபூர ணானந்தமே. |
(பொ - ள்.) 'அந்தகா . . . படித்ததார்' - அறியாமை ஆகிய அகவிருளை ஒரு வீடாக்கி, மின்னலைப்போல, எளியேனுடைய அறிவினைச் சுருங்கச் செய்து அவ்விடத்து வைத்தவர் யார்? அந்த அறிவும் தான் பிடித்ததனையே நிலைக்களமாகக் கொண்டு, அதில் மூழ்கவும், என்னுடைய தலையின்மீது, உரிமையாய் எழுதிவைப்பதற்குக் கற்றது யார்?
'மெய்ஞ்ஞான . . . தவரார்கொலோ' - உண்மையாகிய மூதறிவுப் பேரின்பங்களுக்கு ஏதுவாகிய ஒருமை நிலையாகிய நிட்டையினைப் பொருந்தாமல், சோற்றினை யடைத்துவைத்த துருத்திபோலும் உடம்பினை (என்றும் பொன்றா) நிலையுடைய ஒன்றென நினைத்து, பல முறை உண்டதே உண்டு உறங்கும் செயலைச் செய்வித்தவர் யாவர்?
'தந்தைதாய் . . . ஏதுமறியேன்' - அப்பன் அம்மை முதலாகிய உலக முழுவதனையும் உண்டாக்கினதற்குக் காரணம் அடியேனுடைய ஆரா விருப்பமோ? என்னை யானே நொந்துகொள்வேனோ, அயலவரையே நொந்துகொள்வேனோ நீங்காப் பிறப்புச் சிறையினை யுண்டாக்கிய பழவினையினை நொந்துகொள்வேனோ? இப்பொழுதுள்ள பொல்லாக் காலத்தை நொந்துகொள்வேனோ, மேலான மெய்ப்பொருள் சிறிதும் உணர்ந்திலேன்.
'பார்க்குமிட . . . ணானந்தமே.'
(வி - ம்.) அந்தகாரம் - இருள். அகம் - வீடு. மெய்ஞ்ஞானம் - மூதறிவு. சதம் - நிலையானது. அகிலப்பிரபஞ்சம் - உலக முழுவதும் பரமார்த்தம் - மெய்ம்மை.