| தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணார் |
| என்னா மெனாஅறிவா ரின்று." |
| - சிவஞானபோதம், 9. 1 - 1. |
(13)
இல்லை உண்டென் றெவர்பக்க மாயினுஞ் | சொல்ல வோஅறி யாத தொழும்பன்யான் | செல்ல வேறொரு திக்கறி யேன்எலாம் | வல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே. |
(பொ - ள்) [ஒருயிர் தன்பால் முதன்மை (சுதந்திரம்) ஏறட்டுக் கொண்டு திரியுங் காலமுற்றும் முதல்வன் பின்னின்றருள்வன், முதல் வன்மாட்டு முதன்மையும் தன்மாட்டு அடிமையும் கொண்டொழுகுங் காலத்து அவன் முன்னின்றருள்வன்] அடியேன் இல்லை யென்றோ? உண்டென்றோ? எவர்பாலும் சென்று சிறப்பித்துக் கூற அறியாத தொண்டனாகிய யான் கற்புடைப் பெண்டிரைப்போல் உன்னை யன்றிப் புகலிடம் பிறிதொன்றும் அறியேன். எல்லாம் வல்ல முடிவிலாற்றலையுடைய நீ அடியேனை வாழ்வித்தருள வேண்டும்.
(14)
வேண்டுஞ் சீரருள் மெய்யன்பர்க் கேயன்பு | பூண்ட நானென் புலம்அறி யாததோ | ஆண்ட நீஉன் அடியவன் நானென்று | தூண்டு வேனன்றித் தொண்டனென் சொல்வதே. |
(பொ - ள்) முதல்வனே! நின்திருவருளை அடியேனுக்கு அளித்தருள வேண்டும். (அதற்கு வாயிலாகிய) உன் மெய்யன்பர்கட்கே அன்புபூண்டொழுகினன்; அடியேன் உள்ளமறியாமே உள்ளத்தே மிக்கெழுந்து ஆண்டருளினை. அதனால் உன் அடிமை நானென்று தூண்டுவ தொன்றன்றி வேறென் சொல்வது?
(15)
எனக்கு ளேஉயி ரென்னஇருந்தநீ | மனக்கி லேசத்தை மாற்றல் வழக்கன்றோ | கனத்த சீரருட் காட்சி யலாலொன்றை | நினைக்க வோஅறி யாதென்றன் நெஞ்சமே. |
(பொ - ள்) அடியேன் நெஞ்சினிடமாக உயிருக்கு உயிராக வீற்றிருந்தருளும் நீ, எளியேன் பண்டைப்பயிற்சி வயத்தால் மனத்துன்பம் அடைவேனாயின் அத்துன்பினை மாற்றியருளுதல் நின் முறைமை யன்றோ? மேலான நின் திருவருட் காட்சியாலல்லாமல் வேறொன்றை நினைக்கவே என்னெஞ்சம் யாண்டும் அறியாது.
(16)