பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

387
திலக வாள்நுதற் பைந்தொடி கண்ணிணை
    தேக்க நாடகஞ் செய்தடி யார்க்கெலாம்
அலகி லாவினை தீர்க்கத் துசங்கட்டும்
    அப்பனே அருள் ஆனந்த சோதியே.
    (பொ - ள்.) வளரும் அழகாகிய எழில் வாய்ந்துள்ள பொட்டணியப்பட்ட ஒளியுடைய திருநெற்றியினையும், அழகிய பசிய வளையலணிந்துள்ள திருக்கையினையும் உடைய உமையம்மையார் ஆருயிர்களின் பொருட்டுத் திருநோக்கஞ்செய்து கண்ணிணை தேக்கியருளும் படி தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் திருவருட்கூத்தியற்றியருளி, மெய்யடியார்கட்கெல்லாம், அளவில்லாத முத்திற வினைகளையும் நீக்கியருளுதற்குக் கொடிகட்டியருளும், அப்பனே, அருளின்பப் பேரொளியே! எளியேனை இவ்வுலக மாயைக்குட்படுத்தி உழலும்படி விட்டுவிட்டனையே, எளியேனை அடிமையாகக் கொள்ளும் உரிமையும் கடமையும் உடையோனே, திருவருள் திகழ்கின்ற நின்திருவடிப் பேறாகிய பேரின்பப் பெருவீட்டின்கண் அடியேனை அமர்த்திவைத்தருள்வது எந்நாளிலோ? மொழிந்தருள்வாயாக.

(7)
முன்னிலைச்சுட் டொழிதியெனப் பலகாலும்
    நெஞ்சேநான் மொழிந்தே னேநின்
தன்னிலையைக் காட்டாதே என்னையொன்றாச்
    சூட்டாதே சரண்நான் போந்த
அந்நிலையே நிலையந்த நிலையிலே
    சித்திமுத்தி யனைத்துந் தோன்றும்
நன்னிலையீ தன்றியிலை சுகமென்றே
    சுகர்முதலோர் நாடி னாரே.
    (பொ - ள்.) நெஞ்சமே! முன்னிலைச் சுட்டாகிய கண்ட புறப் பொருள்களில் செல்லும் நாட்டத்தினை ஒழித்து விடுவாயாக வென்று நான் பலகாலும் மொழிந்தேனே, மேலும் உன்னுடைய நிலைமையினை ஒருசிறிதுங் காட்டாமலும், என்னை ஒருபொருளாகச் சூட்டிக் கொள்ளாமலும், அடியேன் நீங்காப் புகலிடம் எனப்புகுந்த, அந்நிலை மாறாத அருள்நிலை; அந்நிலையிலேயே பேரும் பெருவாழ்வும் முதலிய அனைத்தும் கைகூடும்; அதுவே நன்னிலை; அஃதன்றிப் பொன்றாப் பேரின்பம் வேறில்லை யென்றே சுகர் முதலிய மேலோர் மொழிந்தருளி நாடினர்.

(8)
அத்துவிதம் பெறும்பேறென் றறியாமல்
    யானெனும்பேய் அகந்தை யோடு
மத்தமதி யினர்போல மனங்கிடப்ப
    இன்னம் இன்னம் வருந்து வேனோ