ஆகிய மூன்று கருவிகளியங்கும். சொல்லப்படும் கொப்பூழினிடமாகப் பேருறக்கமெனப்படும் தரியம் நிகழும்; இவ்விடத்து உயிர்க்காற்றும் ஆளும் ஆகிய இரு கருவிகளியங்கும். அழுத்தப்படும் உயிர்ப்படங்குதலாகிய துரியாதீதத்திற்கு இடம் மூலமாகும்; இவ்விடத்து ஆளாகிய புருடனொன்றே செயலற்று அறியாமைக்குக் கருவியாகிய மூலப் பகுதியோ டமர்ந்து கிடக்கும். இவ்வகையாகிய நிலைகள் ஐந்தின் மெய்ம்மையினை முதறிவு வாய்க்கப்பெற்ற மேலோ ருணர்வர்.
(26)
இடத்தைக் காத்திட்ட சுவாவெனப் புன்புலால் இறைச்சிச் | சடத்தைக் காத்திட்ட நாயினேன் உன்னன்பர் தயங்கும் | மடத்தைக் காத்திட்ட சேடத்தால் விசேடமாய் வாழி | விடத்தைக் காத்திட்ட கண்டத்தோய் நின்னருள் வேண்டும். |
(பொ - ள்.) வளர்ப்போன் வீட்டைக் காப்பதன்றிப் பிறிதொன்றும் அறியாத நாயினைப்போன்று, அடியேன் புல்லிய புலால் நாற்றம் வீசுகின்ற இறைச்சி நிறைந்த இவ்வுடம்பினைக் காத்துக்கிடக்கும் எளியேன், நின் திருவடிக்கு மெய்யன்பு பூண்டொழுகும் சிவனடியார் தங்கிச் சிறப்புறும் திருமடத்தைத் திருவருளால் காத்து அவர் திருவமுதருந்தி எஞ்சிய அமுதத்தினை அடியேன் உண்டு சிறப்புற வாழும் பொருட்டு, தேவர்கள் வாழ நஞ்சினையுண்டு கண்டத்தடக்கிய திரு நீலகண்டச் செல்வனே! நின் திருவருளினைத் தந்தருளுதல் வேண்டும். திருமடச்சிறப்பு வருமாறு:-
| "பலியும் அவியும் பரந்து புகையும் |
| ஒலியும்எம் ஈசன் தனக்கென்றே யுள்கிக் |
| குவியுங் குருமடங் கண்டவர் தாம்போய்த் |
| தளிரு மலரடி சார்ந்துநின் றாரே." |
| 10. 2601 |
(27)
வாத னைப்பழக் கத்தோடு மனம்அந்த மனத்தால் | ஓத வந்திடும் உரையுரைப் படிதொழி லுளவாம் | ஏதம் அம்மனம் யாயைஎன் றிடிற்கண்ட எல்லாம் | ஆத ரஞ்செயாப் பொய்யதற் கையமுண் டாமோ. |
(பொ - ள்.) பல பிறப்பிடைப் பயின்ற பயிற்சி வயத்தால் மனம் புறத்துச்செல்ல முற்படும்; அம்மனம் முற்படவே அதன் வழித்தாகச் சொல்லப்படும் உரை வெளிப்படும்; அவ்வுரையின்படி தொழில் நிகழும்; பயிற்சி வயப்பட்ட குற்றத்திற்கிடமாகிய அம்மனம் நிலையில்லாத மாயாகாரியமெனின், அதன் வழித்தாகப் பற்றப்படும் புலன்கள் அனைத்தும் விரும்பத்தகாத நிலையில்லாததெனப்படும் பொய்யென்பதற்கு ஏதும் ஐயமுண்டாமோ?
ஐய வாதனைப் பழக்கமே மனநினை வதுதான் | வைய மீதினிற் பரம்பரை யாதினும் மருவும் |