பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

460
அதுபோல் "சிவ சிவ" என்றிருத்தலே சும்மா இருத்தலாகும். அதுவுமின்றியிருத்தலே சும்மா இருத்தலெனக் கொள்ளின் அக்கொள்கை ஆருயிர் கற்போற் கிடக்கும் என்று கூறுவாரோடொக்கும்! சும்மா இரு என்னும் உண்மை வருமாறு :

"செம்மான் மகளைத் திருடுந் திருடன்
 பெம்மான் முருகன் பிறவான் இறவான்
 சும்மா விருசொல் லறவென் றலுமே
 அம்மா பொருளொன் றுமறிந் திலனே"
- கந்தரனுபூதி. 12.
    'அம்மா' வியப்பிடைச்சொல். 'பொருளொன்றும்' என்றது சுட்டுணர்விற்கு வாயிலாம் மாயாகாரியப் பொருள்.

(26)
காதற்றுப் போனமுறி கட்டிவைத்தால் ஆவதுண்டோ
தீதற்ற காயமும்அச் செய்கையே - போதமாய்
நிற்பரல்லால் இச்சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினுந்
தற்பரமாக் கண்டிருப்பார் தாம்.
     (பொ - ள்.) (கயிறு கோப்பதற்கு முறியாகிய ஓலையின்கண் இடப்படும் தொளை காதெனப்படும்.) காதற்றுப்போன எழுதப்பட்ட ஓலைகளைக் கட்டி வைத்திருப்பதால் பயன் ஏதும் வருவதுண்டோ? அதுபோல் குற்றமற்ற உடம்பும் மெய்யுணர்வு பெற்றார்க்கு நீங்காதிருப்பின் அதனால் ஏதும் அவர்கட்குப் பயனின்றாம். அவ்வுடம்பகத்து நின்றாலும் இவ்வுலகப் பொருள்கள் ஒன்றையும் நாடார். அப் பொருள்கள் புலப்பட்டாலும் அப் பொருள்களினிடமாகக் காணத்தக்க மெய்ப்பொருளாம் சிவனையே 1 காண்பர்.

     (வி - ம்.) கண்ணுமூக்கும் ஒருங்குள்ளார் நறுமண மலரின் காட்சியினையும் மணத்தினையும் ஒருங்குணர்வர். உணரினும் நறுமண உணர்வே சிறப்புணர்வாகும். மூக்குப்பொறி பழுதுற்றார் அம் மணத்தினை எங்ஙனம் உணர்வர்?2 அதுபோல் மெய்யுணர்வு கை வந்தார் உலகப்பொருள்களைக் கண்ணாரக் காணினும் அப் பொருளின் வாயிலாகச் சிவத்தையே காண்பர்.

(27)
வெள்ளங் குலாவுசடை வெள்ளக் கருணையினான்
கள்ளங் குலாவுவஞ்சக் கள்ளனேன் - உள்ளத்தில்
இல்லனென்றால் அன்னவன்றான் எங்கும் வியாபகத்தான்
அல்லனென்றுஞ் சொல்லவழக் காம்.
     (பொ - ள்.) நடப்பாற்றல் எனப்படும் மறைப்பாற்றலாகிய வெள்ளப்பெருநீர் விளங்கும் திருச்சடையினையுடைய சிவபெருமான் அருட்பெருங்கடலாவன், களவு கரவு முதலிய குற்றம் நிரம்பிய கள்ளமுடையேன்;

 1. 
'மாதர்ப் பிறைக்கண்ணி' 4 3. 1.
 2.  
'அருக்கன் நேர்.' சிவஞானபோதம், 11. 2 - 1.