எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும்நின் | தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே. |
(பொ - ள்.) (எத்தகைய சிற்றுயிர்க்கும் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்று அவ்வவற்றை இயக்கியருள்பவன் நீ யாகையால் அத் தொடர்பு நினைந்து) அனைத்துயிர்களையும் எளியேன் உயிர்போல் எண்ணி இரக்க முற்று அவற்றிற்கு அன்பால் உதவிசெய் தொழுகும்படி நின் தெய்வத் திருவருட் பெருந் தண்ணளியினைச் செய்வாயாக.
(65)
வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகப டொன்றறியேன் | சிட்டருடன் சேர்அனந்த தெண்டன் பராபரமே. |
(பொ - ள்.) வெளிப்படையாகத் தோன்றும் அறிவில்லாத பேதையேன் அடியேன் வேறு வகையான வஞ்சனை முதலியது ஒன்றும் அறியேன். நின்மெய்யடியாருடன் அடியேனைச் சேர்த்தருள்வாயாக. அளவில்லாத வணக்கம் புரிகின்றேன். தெண்டம் - வணக்கம்.
(66)
இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம் | வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே. |
(பொ - ள்.) நின்திருவடியினை மறப்பதாகிய இரவும், மறந்து நினைப்ப தாகிய பகலும் இல்லாத ஒரே நினைப்பாம் ஐந்தாம் நிலையில் திருவடிச் சார்பாம் சிவச்செறிவில் அடியேன் நிற்குமாறு திருவருள் புரிவாயாக. சிவச் செறிவு - சிவயோகம். ஐந்தாம்நிலை - அப்பால்நிலை; துரியாதீதநிலை.
(67)
மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்றுசுகக் | கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே. |
(பொ - ள்.) அடியேனுக்குத் திருவருள் கூட்டிவைப்பது போன்று ஆசைகாட்டி எளியேன் மயங்காவண்ணம், இந்நாளில் பேரின்பத் தோற்றத்தைக்காட்டிப் பின் வாங்கிவிடாமல் முற்றாகத் தந்தருள வேண்டும். கால் - தோற்றம். மால் - ஆசை.
(68)
எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத | வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே. |
(பொ - ள்.) (எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெரும் பொருள் நீயேயாகும். உறுப்பனைத்தும் உறுப்பியாகவும் உறுப்பியின் உண்ணின்றியக்கும் உயிராகவும் கருதப்படுதல் போன்று) எல்லாப் பொருள்களையும் யாண்டும் இயக்கும் நீயே எல்லாப் பொருள்களுமென்று எண்ணி நான் என்னும் செருக்குத் தோன்றாத நல்லிடத்தை அடியேனுக்கு நீங்கா நிலையாக வைத்தருளவேண்டும்.
(69)
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென் | றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. |
(பொ - ள்.) (புறக்கருவியும், அந்தக்கரணங்களும் மேன்மேற்கிளைத்துத் தொழிற்படு நிலையடங்கிச் சிவனே என்று திருவருளால்