(பொ - ள்) உலகியல் நூலுணர்வால் திருவடியுணர்வு கைகூடுதல் சிறுவீடு கட்டி விளையாடும் பேதைப் பருவப்பெண்கள் சமைக்கும் மணற்சோற்றால் பசி நீங்குவதனோ டொக்கும்.
(187)
வாசகஞா னத்தால் வருமோ சுகம்பாழ்த்த | பூசலென்று போமோ புகலாய் பராபரமே. |
(பொ - ள்) வாய்வன்மையால் பேசும் வல்லானொருவனுக்கு அப்பேச்சுத் திறனால் பேரின்பம் கூடுமோ? இப் பாழான வாய்மொழிப் போரால் வருமுனைவு வண்ணம் நீங்குமோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக
(188)
கேட்டதையே சொல்லுங் கிளிபோல நின்னருளின் | காட்டமின்றி வாய்பேசல் நன்றோ பராபரமே. |
(பொ - ள்) பிறர் கூறுவதைக் கேட்டுக், கேட்டவண்ணம் கூறும் கிளிப்பிள்ளை போன்று அடியேனும் நூலும் நூலுணர்ந்தாரும் கூறுவதைக் கேட்டு அப்படியே கூறிக்கொண்டு வருவதால் உண்டாகும் நன்மை யாது? (ஏதுமின்று) நுகர்வுணர்வு - (அனுபவம்) வேண்டும்.
(189)
வெளியாய் அருளில் விரவும்அன்பர் தேகம் | ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே. |
(பொ - ள்) திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதாகாய வடிவமாகிய உன்னன்பர் நின்திருவருள் ஒளியில் கலந்தபின் அவர்களுடைய பூதவுடல் மாயாகாரிய ஒளியாகத் தோன்றாது திருவருள் ஒளியாகவே1 நிற்கும்.
(190)
காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை | ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே. |
(பொ - ள்) முன்னவனருளால் முக்காலமும் தங்கருத்தில் உணர்ந்த மூதறிஞர், (பொதுமக்களிடையே அவ்வுணர்ச்சியின் பயனாக அம் மக்கட்கு நேரப்போகும் நலம்பொலங்களை) அதனைப் பொது மக்களிடையே தாம் அறிந்திருந்தாலும் கூறார். ஞாலம்-உலகோர்; பொது மக்கள்.
(வி - ம்) இவ் வுண்மையினையே "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என உலகோர் கூறுகின்றனர். இவ்வுண்மை வருமாறு :
"வந்த காரணம் வயங்கிய கொள்கைச் | சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும் | ஆர் வமுஞ் செற்றமு மகல நீக்கிய | வீர னாகலின் விழுமங் கொள்ளான்." | - சிலப்பதிகாரம் 10. நாடு - 166 - 1. |
இங்ஙனமன்றி மெய்ப்பொருளைக் கண்டவர் விண்டிலர் என நினைப்பது பொருந்தாததாகும். மேலும் அது "கண்ணால் யானுங்கண்டேன் காண்க" என்னும் (8. திரு அண்டப்பகுதி-58.) என்னும் செந்தமிழ்த் தனித் தமிழ்த் திருமாமறை முடிவுக்கு முற்றும் முரணாகும்.
(191)
1. | 'மாமைமா மாயை.' சிவப்பிரகாசம், 70. |