தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல் | வாடாச் சமனிலையில் வாழ்வார் பராபரமே. |
(பொ - ள்) எளிதில் எல்லாராலும் தேடமுடியாத அன்பராயினார்க்குத் திருவருளால் வந்து பொருந்திய திருவடிச் செல்வத்தையுடையவரே, வணிகர்தம் கோடாத செங்கையில் தாங்கும் துலாக்கோல் போல் பெருக்கத்து மகிழாமலும் சுருக்கத்து வருந்தாமலும் சமனிலையாக நிற்பர். அவர்தம் வாழ்வே அருள்வாழ்வாகும்.
(234)
நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப் | பாராத தென்னோ பகராய் பராபரமே. |
(பொ - ள்) நின்திருவடியினைக் காணப் பெறாது உள்ளம் கசிந்து நீராய் உருகிப், பெருமூச்சுவிட்டு நின்ற அடியேனைத் தேவரீர் திருக்கடைக்கண் பாராத தென்னையோ? திருவாய்மலர்ந்தருள்வீராக.
(235)
உள்ளபொருள் ஆவி உடல்மூன்றும் அன்றேதான் | கொள்ளைகொண்ட நீயென் குறைதீர் பராபரமே. |
(பொ - ள்) தேவரீரால் கொடுக்கப்பட்டு அடியேன்பால் இரவலாக நின்றுள்ள "ஆவியும் உடலும் உடமையும்"1 ஆகிய மூன்றும் தேவரீர் மோன குருவாக எழுந்தருளிய காலத்தே அடியேன் ஒப்புவிக்க ஏற்றுக்கொண்டருளினீர். அத்தகைய நீர் எளியேன் குறைகளைத் தீர்த்தருளுதல் வேண்டும்.
(236)
ஆழ்ந்தாயே யிவ்வுலகில் அல்லலெல்லாந் தீர்ந்தருளால் | வாழ்ந்தாயே என்றனைநீ வாழி பராபரமே. |
(பொ - ள்) (நாயனீர் சிவகுருவாய் எழுந்தருளிவந்து அடியேனை ஆட்கொண்டருளிய காலத்தில்) எளியேனை நோக்கி நீ இத்தனை காலமும் இவ்வுலக மயக்கில் சிக்கி ஆழ்ந்துழன்றனையே, அத்துணை அல்லல் அனைத்தும் திருவருளால் நீங்கி வாழ்ந்தனையே என்று நீ திருவாய் மலர்ந்தருளினை; நின்திருவடி வாழ்க.
(237)
தாரா அருளையெல்லாந் தந்தெனையும் நின்னருளின் | வாராயோ என்றனைநீ வாழி பராபரமே. |
(பொ - ள்) அந்நாளில் (தகுதியில்லாத எளியேனுக்குத்) தருதற்குப் பொருத்தமில்லாத நின்திருவருள் முழுவதையுந் தந்து அடியேனையும் நின்திருவருளால் வருவாயாகவென்று கூவி அழைத்தருளினை. அங்ஙனம் திருவாய் மலர்ந்தருளிய நாயனீர் வாழ்க.
(வி - ம்.) முதற்கண் திருவருளைத் தருதல் ஒருவன் தூய்மை எய்துதற் பொருட்டு அவனைத் திருத்தநீரின்கண் மூழ்குவித்த லோடொக்கும். பின்னர்த் திருவருளில் வருமாறழைத்தல் தூய்மை
1. | 'அன்றே என்றன்'. 8. குழைத்தபத்து. 7. |