அத்துவித மான அயிக்ய அனுபவமே | சுத்தநிலை அந்நிலையார் சொல்வார் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் திருவடிக்கண் மும்மைப்புணர்ப்பாம் அத்துவிதத்தாற் கூடிய நுகர்வின்பமே இயற்கை நிலையெனப்படும். அந்நிலையின் சிறப்பினை யாவரே எடுத்துரைக்க வல்லார்?
(வி - ம்.) மும்மைப்புணர்ப்பு - ஒன்றாய் வேறாய் உடனாய்ப்புணரும் மெய்ப்புணர்ப்பு. சுத்தநிலை - இயற்கைநிலை. சொல்லுக்கடங்காத இன்பம் நுகர்வின்பம் எனப்படும். அதனை நொடித்தலாகிய சொல்லாற் கூறுவது எங்ஙனம்? (முடியாதென்பதாம்.)
(293)
வைத்த சுவரலம்பின் மண்போமோ மாயையினோர்க் | கெத்தனையோ தித்தும்என்னாம் எந்தாய் பராபரமே. |
(பொ - ள்) மண்ணாலாக்கப்பட்ட சுவரினைத் தண்ணீர் விட்டுக் கழுவுவதனால் அம் மண் போய்விடுமோ? (போவதில்லை.) அதுபோல் (இருவினையொப்பு, மலபரிபாகம், திருவருள்வீழ்ச்சி அமையப்பெறும்) தகுதியில்லாதாருக்கு நல்ல நூற்பொருள்களை எத்தனை போதித்தாலும், அவர்கள் மாயை மயக்கிற்குட்பட்டவராதலால், அவர்க்கு அம் மயக்கம் எந்தையே போகாதென்க. அதனால் போதனையான் வரும்பயன் ஏதுமின்றாம்.
(294)
பூட்டற்றுத் தேகமற்றுப் போகுமுன்னே நின்னருளைக் | காட்டத் தகாதோஎன் கண்ணே பராபரமே. |
(பொ - ள்) அடியேனின் கண் போன்ற கண்ணுதலே! நரம்பினால் கட்டப்பட்டுள்ள பூட்டுக்கள் அற்று இவ் வுடம்பு அழிவதற்கு முன்னே நின்திருவருளை அடியேனுக்குக் காட்டியருளுதல் தகாதோ? பூட்டு - பொருத்து.
(295)
சொல்லிற் பதர்களைந்து சொல்முடிவு காணாதார் | நெல்லிற் பதர்போல நிற்பார் பராபரமே. |
(பொ - ள்) (இம்மையினை மிகுதியாக எடுத்துக்கூறும்) உலகியல்புகளை மிகுதியாகப் பாராட்டிக் கூறும் நூல், நூல்களுள் பதர் என்று சொல்லப்படும். அந்நூற்பயிற்சியால் உண்மை முடிவு காணாதார் மக்களுக்குள் பதராவர்.
(296)
அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள் | இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே. |
(பொ - ள்) நன்னெறியினைத் திருவருளால் கைக்கொண்டு ஒழுகும் நல்லார் தம் சிவ வாழ்வினைக் கண்டு மிக்க பொறாமை கொண்டொழுகும் நெஞ்சினையுடைய முக்கூற்றுப்புறச் சமயத்தாரும் அதனால் நெஞ்சு மழுக்கமெய்தியுள்ளனர். அதனால் அவர்கள் கீழ்மக்களாவர். அவர்கள் நின்திருவடிப் பேரின்பப் பெருநலம் எய்தார்.
(297)