துணைக்காரணம், இருவினையும் இதன் வழித்தாய துணைக் காரணம். உறைவிடத்துறைவி - வசிக்குமிடத்துறும் வியாபி.
(310)
வானாதி தத்துவமாய் மன்னிநின்ற காரணநீ | நானாகி நிற்பதெந்த நாளோ பராபரமே. |
(பொ - ள்) எங்கும் பரந்து எவற்றையும் இயக்கும் பெருநிறைவுத் தன்மையில் சிவன் வான்முதலாகச் சொல்லப்படுகின்ற எல்லா மெய்களாகவும் அவற்றை இயைந்தியக்கிக்கொண்டு நீக்கமற நின்றருள்கின்றனன். அங்ஙனம் வினைமுதற் காரணமாய் நிற்கின்ற தேவரீராகச் சிவவுள்ளலால் அடியேன் உறைத்து நிற்பதெந்நாளோ?
(வி - ம்.) மெய்கள் - தத்துவங்கள். இயைந்தியக்கல் - அதிட்டித்தல். சிவவுள்ளல் - சிவோகம்பாவனை.
(311)
காட்டத்தில் அங்கி கடையவந்தால் என்னவுன்னும் | நாட்டத்தின் ஊடுவந்த நட்பே பராபரமே. |
(பொ - ள்) விறகின்கண் முன்னமே புணர்ப்பாய் மறைந்து விளங்காதிருந்த தீ கடைந்த காலத்தில் வெளிப்பட்டு விளங்குவது போன்று, அடியேனுள் தொன்மையிலேயே உடனாய் மறைந்து நின்றருளும் தேவரீர் (சிவபெருமான்) திருவருளால் எளியேன் தீ வெளிப்படக் கடைவது போன்று நும் திருவடியை ஒல்லும் வகை ஓவாது உள்ள தேவரீர் வெளிப்பட்டுத் தோன்றி அடியேனை ஆட்கொண்டருளிய நட்பே.
(வி - ம்.) காட்டம் - விறகு. நட்புமுறை ஆண்டான்பால் நம்பியாரூரர் போன்று வேண்டுவன கூசாது அடிமைகள் விண்ணப்பித்தற்கு உரிய நேசமாகும்.
(312)
நித்திரையாய்த் தானே நினைவயர்ந்தால் நித்தநித்தஞ் | செத்தபிழைப் பானதெங்கள் செய்கை பராபரமே. |
(பொ - ள்) அகத்தில் உள்ளும் தவமாகிய தியான முறையில் மனச் சோர்வால் உறக்கங் கொள்ளின் நாளும் நாளும் அடியேங்களுடைய செய்கை இறந்தொழிந்த பிழைப்பாகின்றது. (தியானப் பேறு கிட்டுவதில்லை.)
(313)
இன்பநிட்டை எய்தாமல் யாதெனினுஞ் சென்றுமனந் | துன்புறுதல் வன்பிறவித் துக்கம் பராபரமே. |
(பொ - ள்) சிவனடிச் சேர்வாகிய பேரின்பப் பெருநிட்டையினைத் திருவருளால் எய்தப் பெறாமல், உலகியற் பொருள்களுள் எதன்கண்ணேனும் மனம் சென்று துன்பப்படுதலே கொடிய பிறவித்துன்ப நிலையாகும். சிவனடிச் சேர்வு - சிவராசயோகம்.
(314)
பொய்யகல மெய்யான போதநிலை கண்டோர்க்கோர் | ஐயமிலை ஐயமிலை ஐயா பராபரமே. |