பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

587
ஆண்டநின்னை நீங்கா அடிமைகள்யாம் ஆணவத்தைப்
பூண்டதென்ன கன்மம் புகலாய் பராபரமே.
     (பொ - ள்) அடியேங்களை ஆண்டருளிய நாயனீரை விட்டு நீங்கா அடிமைகள் யாங்கள். அங்ஙனமிருப்பவும், தன்முனைப்பாம் ஆணவத்தைத் தனி அணியாகப்பூண்டு யாங்கள் செருக்கடைவதற்குரிய வினை யாதென்று திருவாய் மலர்ந்தருள்வாயாக (முதிர்ந்து முறுகிய செவ்விவாய்க்கப் பெறாமை என்க. அஃதாவது மேலான பரிபக்குவம் வாயாமை.)

(320)
 
எங்கணும்நீ யென்றால் இருந்தபடி எய்தாமல்
அங்குமிங்கும் என்றலையல் ஆமோ பராபரமே.
     (பொ - ள்) எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து பெரும் பரப்பாய்த் தேவரீர் நிற்கும் உண்மை நிலையினை அருளால் உணர்ந்தால் அடியேன் இருந்தபடியே நின் திருவருளை அணையாமல் அங்கே கடவுள், இங்கே கடவுள் என்று அறியாமை மேலீட்டால் அலையவொண்ணுமோ? (ஒண்ணாது என்க.)

(321)
 
கற்குமது வுண்டு களித்ததல்லால் நின்னருளில்
நிற்குமது தந்ததுண்டோ நீதான் பராபரமே.
     (பொ - ள்) உலகியற் கலையுணர்வைத் தந்து அவற்றைக் கற்றுக் களித்துத் திரியும்படி செய்ததல்லாமல், தேவரீர் திருவடி யுணர்வைத் தந்து நும் திருவருளின்கண் ஒற்றித்து நிற்கும் நிலையினை எளியேனுக்குத் தந்தருளிய துண்டோ?

(322)
 
அண்டபகி ரண்டம் அறியாத நின்வடிவைக்
கண்டவரைக் கண்டாற் கதியாம் பராபரமே.
     (பொ - ள்) அண்டத்தின் அகத்தும் புறத்தும், பேரண்டத்தும் உள்ளவரனைவரும் அறியமுடியாத நின் திருவருள்வடிவை நின் திருவருட்டுணையால் கண்டவரைக் காணும் பேறு கிடைக்கப்பெற்றால், நின் திருவடிநிலை கைகூடும்.

(323)
 
கலக்கமுற நெஞ்சைக் கலக்கித் திரும்பத்
துலக்குபவன் நீயலையோ சொல்லாய் பராபரமே.
     (பொ - ள்) தேவரீர் திருவருளாற்றலால் என் வினைக்கீடாக அடியேன் நெஞ்சைக் கலக்கமுற்றுத் துன்புறச் செய்து இருவினை ஒப்புவருவித்துப்) பின் திருவருளால் பற்றற நின் திருவடியினைப் பற்றுக்கோடாகக் கொண்டு கலக்கம் நீங்க நன்னிலையில் வைத்தருளியதும் நீயல்லவா? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(324)
 
சிந்தையும்என் போலச் செயலற் றடங்கிவிட்டால்
வந்ததெல்லாம் நின்செயலா வாழ்வேன் பராபரமே.