பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

594
சீவன் முத்தியாகும். அதற்குரிய நெறியே சித்தாந்த சைவச்செந்நெறி; இதுவே நன்னெறி, பொதுநெறி, சன்மார்க்கம் எனவுங் கூறப்படும்.

(357)
 
உலகநெறி டோற்சடலம் ஓயஉயிர் முத்தி
இலகுமெனல் பந்த இயல்பே பராபரமே.
     (பொ - ள்) மீண்டும் மீண்டும் பிறக்கும் இயல்பினராய் இவ்வுலகில் எடுத்தவுடலினை விட்டு உயிர்நீங்குதல் சீவன்முத்தி நிலையாகாது. இவ்வுடல் திருவருள் வெளியில் கலந்து, உயிர் திருவடி சேர்ந்து பேரின்பம் பெறுவதே சீவன்முத்தி நிலையாகும். நால்வரும் ஏனை நாயன்மாரும் அணைந்த நிலையே சீவன்முத்தியாகும். அங்ஙனமின்றி உடல் நிலத்தே விழ உயிர் நீங்குவது மீண்டும் பிறக்கும் நிலையே என்னப்படும்.

(358)
 
பரமாப் பரவெளியாப் பார்ப்பதல்லால் மற்றெவர்க்குந்
திரமேது மில்லைநன்றாய்த் தேர்ந்தேன் பராபரமே.
     (பொ - ள்) (உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூன்று பொது நிலையுங் கடந்து திருவருள் வெளியாய் நிற்பவன் சிவன். செவிப் புலனாம் ஒலியினைக் கட்புலனாம் வரிவடிவிற்குக் கொண்டு வருவதுபோல் சிவபெருமானையும் திருவருளால்) அவன் ஆருயிர்களின் பொருட்டுத் திருவருளில் கொண்டருளும் திருவுருவ வழிபாடும் அது கடந்த திருச்சிற்றம்பலமாம் அருள்வெளி வழிபாடும் திருவருளால் கண்டு கும்பிடுவதல்லாமல் மற்றெத் திறத்தார்க்கும் திருவடிப்பேறின் மையினை எளியேன் பட்டறிவாகிய அனுபூதியிற் கண்டுகொண்டேன்.

(359)
 
தேடுவேன் நின்னருளைத் தேடுமுன்னே யெய்தில்நடம்
ஆடுவேன் ஆனந்த மாவேன் பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் தேவரீருடைய திருவடியை உள்ளன்பு கொண்டு தேடுவேன்; தேடுமுன்னே பண்டை நற்றவத்தால் அது கைகூடின் இன்பக்கூத் தாடுவேன்; பின் பேரின்பப் பெருவாழ்வாய் நிற்பேன்.

     (வி - ம்.) நாம் சிவபெருமான் திருவடியை மெய்ம்மையாக அடையவேண்டுமென்னும் காதல் கொண்டால் அப்பொழுதே அவன் அதை நிறைவேற்றி யருள்வான் என்னும் உண்மை வருமாறு :

"கருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்
 ஒருமகள்தன் கேள்வனென் றுந்தீபற
 உன்ன அரியனென் றுந்தீபற"
- திருவுந்தியார், 19
(360)
 
உள்ளங் குழைய வுடல்குழைய வுள்ளிருந்த
கள்ளங் குழையஎன்று காண்பேன் பராபரமே.