பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

635
அனைத்திற்கும் மேம்பட்ட பெருங் கரையிலேறி வெளிப்படுவ தெந்நாளோ?

(18)
கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) கையின்கண் விளக்கினை 1 ஏற்றிக்கொண்டு அவ்வெளிச்சத்தின் பின்னே சென்று தனக்கு வேண்டும் உலகியற் பொருள்களைக் காண்பார் போன்று, மெய்யுணர்வு என்று சொல்லப்படுகிற திருவருள் விளக்கை முன்வைத்து அவ்வருள் வெளிச்சத்தின்பின் சென்று மெய்ப்பொருளாம் சிவபெருமானின் திருவடியினைக் கண்டுய்வ தெந்நாளோ?

(1)
கேடில்பசு பாசமெல்லாங் கீழ்ப்படவுந் தானேமேல்
ஆடுஞ் சுகப்பொருளுக் கன்புறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) தொன்மையாக அறிவின்றி என்றும் விளங்கும் அழிவில்லாத பசுத்தன்மையும் பாசத்தன்மையும் திருவருளால் நீங்கவும், இவ்விரண்டிற்கும் மேலாக இன்பக் கூத்தியற்றும் பேரின்பப் பொருளுக்கு நீங்காத ஓங்கிய அன்பு வைப்பதெந்நாளோ?

(2)
ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐவகையாக்
காணவத்தைக் கப்பாலைக் காணுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) பண்டே புல்லிய ஆணவத்தை நீக்கி அறிவினிடத்தே ஐவகை நிலையாக வரும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல் என்னும் அவத்தைகளுக்கு அப்பாற்பட்ட நிலைக்களமாகிய சிவபெருமானின் திருவடியைத் திருவருளால் காணுநாள் எந்நாளோ? ஐவகை நிலை : சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன.

(3)
நீக்கப் பிரியா நினைக்கமறக் கக்கூடாப்
போக்குவர வற்ற பொருளணைவ தெந்நாளோ.
    (பொ - ள்.) வேறன்றி யிருத்தலின் நீக்கப் பிரியாததும், மனத்தின்கண் புணர்ப்பெனப்படும் அத்துவிதமாக இருந்தலின் நினைக்கவும் மறக்கவும் கூடாததாய், எங்கும் நீக்கமில்லாத நிறைவாய் நிற்றலால் போக்கும் வரவும் புணர்வும் இல்லாததாய் உள்ளதும் ஆகிய சிவபெருமானாம் மெய்ப்பொருளைத் திருவருளால் காண்ப தெந்நாளே?

(4)
அண்டருக்கும் எய்ப்பில்வைப்பாம் ஆரமுதை என் அகத்தில்
கண்டுகொண்டு நின்று களிக்கும்நாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தேவர்களுக்கும் இளைத்தவிடத்து வளமிகு வைப்புப் பொருளாய், நிறைந்த அமிழ்தமாய், விளங்கும் சிவபெருமானை அடியேன் அகத்துக் கண்டு களிக்குநாள் எந்நாளோ?

(5)
 1. 
'உற்கைதரும்'. திருவருட்பயன், 18.