ஆடலையே காட்டிஎன தாடலொழித் தாண்டான்பொன் | தாள்தலைமேல் சூடித் தழைக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) ஐவகையாம் மன்றத்தின்கண்ணும் திருக்கூத்தருளும் சிவபெருமான் அத் திருக்கூத்தினை அடியேனுக்குக் காட்டியருளி அடியேனுக்கு அமைந்துள்ள பிறப்பு இறப்புகளாகிய உலகியல் கூத்தை ஒழித்து எளியேனை ஆண்டருளினன். அவன்றன் திருவடிக் கீழ்த் திருவருளாற் கூடி அத் திருவடியினைத் தலைமேற்சூடிப் பேரின்பப் பொலிவோ டிருக்குநா ளெந்நாளோ? "தாடலை மேற்சூடல்" தாடலை போற்கூடல் என்னும் மெய்ப் புணர்ப்பினை யுணர்த்துவதுங் காண்க.
(22)
மேலொடுகீ ழில்லாத வித்தகனார் தம்முடனே | பாலொடுநீர் போற்கலந்து பண்புறுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) ஆதியும் அந்தமுமில்லாத பேரறிவுப் பெருமானார் தம்முடனே ஒருபுடை யொப்பாகப் பாலுடன் சேர்ந்த நீர்போன்று கலந்து சிவப்பண்பினை எய்துநாள் எந்நாளோ?
(வி - ம்.) பாலுடன் சேர்ந்த நீர் பாலின் தன்மையைப் பெற்றுப் பாலாய்த் திகழும் அதுபோல் ஆருயிரும் சிவத்துடன் சேர்ந்து சிவமாய்த் திகழ்ந்தின்புறும். வித்தகம் - பேரறிவு.
(23)
அறியா தறிந்தெமையாள் அண்ணலை நாமாகக் | குறியாத வண்ணங் குறிக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) தற்போதமாகிய முனைப்பறிவு, முன்னிச் செம் பொருளாம் சிவபெருமானை யறியாது அருளுணர்வை முன்னிட்டு எம்மை யாண்டருளிய அண்ணலை யுணர்ந்து, அதுபோல நாமாக அச் சிவனை நினையாது திருவருள் நினைப்பிக்க நினைந்து நிற்குநாள் எந்நாளோ?
(24)
ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம்பரனைப் | பாராமற் பார்த்துப் பழகுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) உலகியல் நூல்களை யாராயாமலும், உலகியல் மந்திரங்களை உன்னாமலும், முதல்வனைத் தற்போத முன்னிட்டுப் பாராமலும் திருவருள் முன்னிட்டுப் பார்த்தலும், திருவடிக்கண் மீளாது பயிலுதலும் வாய்க்குநாள் எந்நாளோ?
(25)
ஊன்பற்றும் என்னோ டுறவுபற்றும் பூரணன்பால் | வான்பற்றுங் கண்போல் மருவுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) உலகுடல்களின்மாட்டுப் பற்றுக்கொண்டுழலும் எளியேனோடு தொன்றுதொட்டே பற்றுக்கொண்டு தொடரும் எங்கணும் நிறைந்துள்ள சிவபெருமான்பால் எவ்வகைத் தடையுமின்றி வான வெளியினைப் பார்க்கும் கண்போன்று திருவடிப் பேற்றினைப் பொருந்துநாள் எந்நாளோ?